படப்பை அருகே தொழிற்சாலை குடோனில் தீ விபத்து


படப்பை அருகே தொழிற்சாலை குடோனில் தீ விபத்து
x
தினத்தந்தி 9 Jan 2019 4:15 AM IST (Updated: 8 Jan 2019 10:32 PM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே தொழிற்சாலை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

படப்பை,

தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூரை சேர்ந்தவர் சாம்ஜீ (வயது 65). இவருக்கு படப்பையை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் மரப்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் குடோன் உள்ளது. இந்த தொழிற்சாலையில் மரங்களை மொத்தமாக வாங்கி மரப்பெட்டிகள், பேக்கிங் பலகைகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் ஊழியர்கள் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது தொழிற்சாலை குடோனின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, குடோனில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரத்திற்கும் மேல் போராடி குடோனில் எரிந்த தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த மரம் அறுக்கும் எந்திரங்கள், மோட்டார்கள், மரப்பெட்டிகள், பேக்கிங் பாக்ஸ் என்று பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும் இந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்ட உடனே அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் மின்கசிவா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவில்லை. இந்த தீ விபத்து குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story