போலி நகைகளை அடமானம் வைத்த ஆட்டோ டிரைவர்கள் உள்பட 4 பேர் கைது


போலி நகைகளை அடமானம் வைத்த ஆட்டோ டிரைவர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2019 4:15 AM IST (Updated: 8 Jan 2019 10:55 PM IST)
t-max-icont-min-icon

போலி நகைகளை அடமானம் வைத்த ஆட்டோ டிரைவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர்கள் லட்சுமணன் (வயது 23), முத்து (26), குப்பமுத்து (22). ஆட்டோ டிரைவர்கள். அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (26). இவர், நகை பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்கள் 4 பேரும் நண்பர்கள் ஆவர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள், சின்னமனூர் அக்ரஹாரத்தில் உள்ள ஒரு தனியார் அடகு கடையில் 23 பவுன் நகைகளை அடமானம் வைத்து ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் வாங்கினர். சமீபத்தில், அந்த நகை அடகு கடையில் தணிக்கை நடந்தது.

அப்போது அங்குள்ள அனைத்து நகைகளும் சோதனை செய்யப்பட்டன. இதில், லட்சுமணன் மற்றும் அவருடைய நண்பர்கள் அடமானம் வைத்த நகைகள் போலியானது (கவரிங்) என்று தெரியவந்தது.

இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில், நகை அடகு கடை உரிமையாளர் சீத்தாராம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதாவது, போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்த வழக்கில் கம்பத்தை சேர்ந்த கோபால் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர், கவரிங் நகை செய்யும் தொழிலாளி ஆவார். கோபாலும், ரஞ்சித்தும் நெருங்கிய நண்பர்கள். கோபால் கொடுத்த நகைகளையே அடமானம் வைத்து அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

குடும்ப செலவுக்காக அடமானம் வைத்து தருமாறு கோபால் கேட்டு கொண்டதன் பேரில், அவரிடம் நகைகளை வாங்கி 4 பேரும் அடகு வைத்ததாக கைதான 4 பேரும் கூறியுள்ளனர். இது உண்மை தானா? அல்லது கோபால் துணையுடன் 5 பேரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே கைதான 4 பேரும் உத்தமபாளையம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள கோபாலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் கூறினர்.


Next Story