இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெரும்பாவூர்,
எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே வட்டப்பறம்பு பகுதியை சேர்ந்தவர் முட்டை பிரதீஷ் (வயது 32). இவர் தற்போது ஆலுவா அருகே உள்ள மாம்பரா பகுதியில் வசித்து வருகிறார். இவர் இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தில் விஞ்ஞானியாக இருப்பதாகவும், தனது தந்தை அமெரிக்கா நாட்டில் நாசா ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக இருப்பதாகவும், தனது சகோதரிகள் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வருவதாகவும் அந்த பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார். தனக்கு ஆஸ்திரேலியாவில் குடியுரிமை இருப்பதாகவும் கூறி போலியான பல புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளார்.
மேலும் சவூதி அரேபியா நாட்டில் நர்சாக பணியாற்றி வரும், கேரள மாநிலம் சாலக்குடியை சேர்ந்த இளம் பெண்ணுடன் முகநூல் வழியாக தொடர்பை ஏற்படுத்தி அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த இளம்பெண் தனது தந்தைக்கு இவருடைய செல்போன் நம்பரை கொடுத்துள்ளார்.
இதையொட்டி அந்த பெண்ணின் தந்தையிடம் பிரதீஷ் நெருக்கமாக பழகி வந்துள்ளார். பின்னர் தான் இந்தோனேசியா நாட்டில் தொழில் தொடங்க இருப்பதாகவும், பின்னர் உங்கள் மகளை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் தொழில் தொடங்க கடன் தந்து உதவுமாறும் கேட்டுள்ளார். இதையொட்டி அந்த இளம்பெண்ணின் தந்தை பிரதீசுக்கு ரூ.8 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.
அதன்பின்னர் பிரதீஷ் இளம்பெண்ணின் தந்தையுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். அவருடைய செல்போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து சாலக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் சாலக்குடி போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஜோஸ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீசை கைது செய்தனர். விசாரணையில் இவர் 10-ம் வகுப்பு வரை படித்து இருப்பதும், தனக்கு பல்வேறு மொழிகள் தெரிந்ததால் பலரிடம் பேசி ஏமாற்றி இருப்பதும் தெரிய வந்தது. மேலும் இவருக்கு திருமணம் ஆகி 3 வயது குழந்தை இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட பிரதீஷ் ஆலுவா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story