மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 234 பேர் கைது


மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 234 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2019 10:30 PM GMT (Updated: 8 Jan 2019 7:23 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 234 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி பல இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்களில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் நேற்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்காக அந்த 2 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் காலை 11 மணியளவில் விழுப்புரம் ரெயில் நிலையம் முன்பு திரண்டு வந்தனர்.

இவர்கள் ரெயில் நிலைய வளாகத்தில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி போராட்டம் செய்தனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவராமன், செயலாளர் முருகன், பொருளாளர் சவுந்தர்ராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அர்ச்சுணன், செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் உலகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து காலை 11.30 மணியளவில் ரெயில் நிலைய முதல் நடைமேடையில் வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்க முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்கள் அனைவரையும் ரெயிலை மறிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் கெடார் பஸ் நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் மாவட்ட தலைவர் சுசீலா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரும், கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரும், அதே இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா தலைவர் மணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 25 பேரும், சின்னசேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா தலைவர் மாரிமுத்து தலைமையில் மறியலில் ஈடுபட்ட 45 பேரும், சங்கராபுரத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 49 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஆக மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் 6 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 234 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story