மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராசிபுரம்,
மோட்டார் பாதுகாப்பு மசோதாவில் உள்ள பாதகமான அம்சங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சம வேலைக்கு சம ஊதியம், முறைசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், ரெயில்வே இன்சூரன்ஸ், பாதுகாப்புத்துறையில் அன்னிய நேரடி முதலீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் எம்.ஜி.ராஜகோபால் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி, பிரதேச செயலாளர் செல்வராஜ், கூட்டுறவு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கசாமி, சி.ஐ.டி.யு. மின் ஊழியர் மத்திய அமைப்பு நாமக்கல் திட்ட பொருளாளர் முருகேசன், அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. செயலாளர் பழனிவேல், முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சங்கரன், ஆட்டோ தொழிலாளர் சங்க தலைவர்கள் சின்னுசாமி, கந்தசாமி, உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு பாலசுப்பிரமணி (ஏ.ஐ.டி.யு.சி.), பாலுசாமி (சி.ஐ.டி.யு.), கிருஷ்ணன் (ஐ.என்.டி.யு.சி.) ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சரஸ்வதி (எச்.எம்.எஸ்.), நஞ்சப்பன் (ஏ.ஐ.டி.யு.சி.), மனோகரன் (ஐ.என்.டி.யு.சி.), சண்முகம் (சி.ஐ.டி.யு.), அருள் ஆறுமுகம் (எல்.பி.எப்.) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். தபால் நிலையம் முன்பு தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பரமத்தி வேலூரில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தொலைதொடர்பு ஊழியர் சங்க பரமத்தி வேலூர் கிளை செயலாளர் ரமேஷ், வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்த குமரேசன், இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட செயலாளர் வேலுசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் இளங்கோவன், போக்குவரத்து ஊழியர் சங்கத்தை சேர்ந்த ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் தொலைதொடர்பு ஊழியர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.
எலச்சிபாளையம் பஸ் நிறுத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. கிளைத்தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட உதவி செயலாளர் சிவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் ஆகியோர் பேசினர். இதில் கட்டுமான சங்க மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜ், விசைத்தறி தொழிலாளர் சங்க தலைவர் ரமேஷ், கிட்டுசாமி, மாதர் சங்க தலைவர் வசந்தா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story