படைப்புழு தாக்கிய பருத்தி செடிக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் கலெக்டரிடம் மனு


படைப்புழு தாக்கிய பருத்தி செடிக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 8 Jan 2019 10:45 PM GMT (Updated: 8 Jan 2019 7:55 PM GMT)

படைப்புழு தாக்கிய பருத்தி செடிகளுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுத்தனர்.

அரியலூர்,

ஆண்டிப்பட்டாக்காடு, வள்ளக்குளம், மேலகாங்கினூர், ஆந்துரையார் கட்டளை, ஒட்டக்கோவில், கீழகாங்கினூர், பெரியப்பட்டாக்காடு, சிலுப்பனூர், புத்தூர், ஆதனூர் உள்ளிட்ட பகுதி பருத்தி விவசாயிகள் பருத்தி செடியுடன் ஒன்று திரண்டு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:-

மேற்கண்ட கிராமங்களில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பயிரிடப்பட்டுள்ள பருத்தியில் புருடீனியா புழு என்கிற அமெரிக்கன் படைப்புழு தாக்கம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இப்புழுவானது இரவு நேரங்களில் பருத்தி செடிகளின் இழைகள், பூக்களை சேதப் படுத்துகிறது. இதுவரை ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் செலவு செய்தும் எந்த வித பயனும் இல்லை.

இதுகுறித்து நாங்கள் வேளாண்துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் பருத்தியை பார்வையிட்டு, சில மருந்துகளை பரிந்துரைத்தனர். அவர்கள் கூறியவாறு பூச்சிகொல்லி மருந்தினை அடித்தோம். அவ்வாறு அடித்தும் புழுக்களை கட்டுப்படுத்த முடியவில் லை. இதனால் ஒட்டுமொத்த மகசூல் இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் மக்காச்சோளம் பயிருக்கு இழப்பீடு வழங்கியது போன்று, அரசு வேளாண் அதிகாரிகளை கொண்டு நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு செய்து, பருத்திச்செடிக்கு விதை வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும் தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர். 

Next Story