சென்னை நகை வியாபாரி வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த வேலைக்காரர் கைது ரெயிலில் தப்பிச்சென்றபோது ஆந்திராவில் பிடிபட்டார்


சென்னை நகை வியாபாரி வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த வேலைக்காரர் கைது ரெயிலில் தப்பிச்சென்றபோது ஆந்திராவில் பிடிபட்டார்
x
தினத்தந்தி 8 Jan 2019 11:00 PM GMT (Updated: 8 Jan 2019 7:59 PM GMT)

கொருக்குப்பேட்டையில் நகை வியாபாரி வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த வாலிபர் ரெயிலில் தப்பிச்சென்றபோது ஆந்திராவில் பிடிபட்டார்.

பெரம்பூர்,

சென்னை கொருக்குப்பேட்டை உள்ளார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). சவுகார்பேட்டையில் நகை வியாபாரம் செய்து வரும் இவர் வீட்டின் அருகிலேயே நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதுதொடர்பாக கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுபற்றி விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சந்தோஷ் வீட்டில் வேலை செய்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த அன்ஸ்ராஜ் (வயது 26) மற்றும் அவரது நண்பர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இருவரையும் தேடியபோது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவர்கள் பயன்படுத்திய செல்போன் எண் சிக்னலை வைத்து விசாரணை நடத்தியபோது அவர்கள் ஆந்திர மாநிலத்தில் ரெயிலில் செல்வது தெரியவந்தது.

உடனே தனிப்படை போலீசார், ஆந்திர ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் அவர்கள் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தபோது இருவரும் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா நோக்கி சென்ற நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தப்பிச்செல்வதை தெரிந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் விஜயவாடா ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். ரெயில் அங்கு வந்ததும் அதில் இருந்து இறங்கிய அன்ஸ்ராஜை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ தங்கமும் 120 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அன்ஸ்ராஜுடன் இருந்த அவருடைய நண்பர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

இதுபற்றி சென்னை கொருக்குப்பேட்டை போலீசாருக்கு ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தனிப்படை போலீசார் அன்ஸ்ராஜை பிடிப்பதற்காக விஜயவாடா விரைந்துள்ளனர். அவரிடம் விசாரித்தால் தான் இந்த சம்பவம் பற்றி முழுமையான தகவல் தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story