புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 9 Jan 2019 4:15 AM IST (Updated: 9 Jan 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிற் சங் கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

புதுக்கோட்டை,

விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இருக்கும் வேலையை பறிக்க கூடாது. தொழிலாளர் சட்டங்களை திருத்தக்கூடாது. பொதுத்துறை பங்கு விற்பனையை கைவிட வேண்டும். சில்லறை விற்பனை மற்றும் பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கூடாது. குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் 2 நாட்கள் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்து தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் சங்கங்கள், அஞ்சல்துறை ஊழியர்கள் சங்கம், வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்தப்பட்ட போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

ஆனால் வங்கிகள், வருமானவரித்துறை, காப்பீடு அலுவலகங்கள் செயல்படவில்லை. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பல அலுவலகங்களில் பணியாளர்கள் வராததால் அங்கு பணிகள் முடங்கின. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும். சிறப்புக் காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி மற்றும் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

Next Story