மத்திய அரசை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது


மத்திய அரசை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
x
தினத்தந்தி 9 Jan 2019 4:45 AM IST (Updated: 9 Jan 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து கோபியில் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோபி,

ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையம் அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டசெயலாளர் முனுசாமி தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் மாணிக்கம், விவசாயிகள் சங்க மாவட்டசெயலாளர் சண்முகவள்ளி, பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவேண்டும். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் சிறு–குறு தொழில்கள் அழிந்து மக்களின் வாழ்வாதாரத்தை பறித்த மத்திய அரசை கண்டித்தும் மற்றும் விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்யவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் திடீரென பஸ் நிலையம் அருகே செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கோபி போலீசார், சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் என 50–க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சாலைமறியலால் கோபி பஸ் நிலையம் அருகே உள்ள ஈரோடு–மைசூரு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story