வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் கரூரில் ரூ.50 கோடி பரிவர்த்தனை பாதிப்பு


வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் கரூரில் ரூ.50 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2019 11:00 PM GMT (Updated: 8 Jan 2019 8:36 PM GMT)

கரூரில் வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.50 கோடிபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

கரூர்,

பெரிய தொழில் நிறுவனங்களிடமிருந்து வாராக்கடன்களை வசூல் செய்ய அரசு சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் மற்றும் விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்துவது உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்டத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தனியார் வங்கிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று வங்கி பணிகள் பாதிப்படைந்தன. இதனால் பணம் எடுப்பது, காசோலையை மாற்றுவது, வங்கி கணக்கு தொடங்குவது, நகைகளை அடகு வைப்பது, அடகு வைத்ததை மீட்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பான பாதிப்புகள் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசனிடம் கேட்ட போது கூறியதாவது:-

மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கரூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ.50 கோடிபரிவர்த்தனை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கரூரில் உள்ள கொசுவலை, பஸ்பாடி, டெக்ஸ்டைல் உள்ளிட்ட ஜவுளி நிறுவனத்தினருக்கு பணபரிவர்த்தனை முடங்கியதால் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். எனவே மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்டமாக தொடர் போராட்டம் நடத்துவதற்கு கூட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

கரூர் மாவட்ட அஞ்சலகங்களில் பணியாற்றும் தபால்காரர், கிளார்க், ஜி.டி.எஸ்.-எம்.டி.எஸ். பணியாளர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அஞ்சலக சேமிப்பு கணக்கில் பணம் செலுத்துதல், எடுத்தல் மற்றும் பதிவு தபால்களை அனுப்புதல் உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டது. மேலும் கரூர் கோட்டம் அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஊழியர் சங்கங்கள் சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். செயலாளர்கள் பழனிசாமி, குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அஞ்சல் சேவைை-யை கார்ப்பரேட் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

Next Story