குளித்தலை பகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தாமதம் பணம் இல்லாததால் அவதி


குளித்தலை பகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தாமதம் பணம் இல்லாததால் அவதி
x
தினத்தந்தி 9 Jan 2019 4:15 AM IST (Updated: 9 Jan 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை பகுதி ரேஷன் கடைகளில் இருப்பில் போதுமான பணம் இல்லாததால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் குடும்ப அட்டை தாரர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

குளித்தலை,

தமிழகத்தில் தைபொங்கல் திருநாளையொட்டி அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், கரும்பு துண்டு அடங்கிய பரிசுதொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார். இதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை நகர மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், சில கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண் வரிசையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல கடைகளில் தினமும் ஒரு தெருவை சேர்ந்தவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அறிவிக்கப்பட்ட கடைகளில் கூட்டம் இல்லாத நேரங் களில் குறிப்பிட்ட தெருவை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் மற்ற தெருவை சேர்ந்தவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

பல கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க வேண்டி பணம் இருப்பு இல்லாத காரணத்தால் அந்த ரேஷன் கடைகளை அதன் அலுவலர் பூட்டிவிட்டு சென்று விடுகிறார்கள் என தெரிகிறது. இதனால் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லவேண்டிய நிலை காணப்படுகிறது. மேலும் சில ரேஷன்கடை அலுவலர் சம்பந்தப்பட்ட துறையில் இருந்து பணம் பெற்று வந்து மீண்டும் வழங்கும்வரை பல மணிநேரம் அந்தகடை அருகிலேயே காத்திருக்கவேண்டிய அவலநிலை இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இனிவரும் நாட்களில் கைவசம் இருப்பு உள்ள தொகுப்பு பொருட்கள் மற்றும் தொகைக்கேற்ப உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என பொதுமக்கள் அறியும் வகையில் செய்து பொதுமக்கள் ஏமாற்றமடைவதை தவிர்க்கலாம்.

மேலும் ரேஷன்கடைக்கு நடந்து வரமுடியாத நிலையில் உள்ள ஆதரவற்ற வயதான முதியவர்களும் நேரில் வந்தால் மட்டுமே பொங்கல் பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்படுமென அக்கடை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த முதியவர்கள் மிகுந்த சிரமப்பட்டு அருகில் உள்ளவர்கள் உதவியுடன் ஆட்டோக்களில் வந்து பொருட்களை வாங்கிச்செல்லவேண்டிய பரிதாபமான நிலை உள்ளது. இதுபோன்றவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story