பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் தாராபுரத்தில் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு


பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் தாராபுரத்தில் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு
x
தினத்தந்தி 9 Jan 2019 4:00 AM IST (Updated: 9 Jan 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் தாராபுரத்தில் 3 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.

தாராபுரம்,

தாராபுரத்தில் பெரிய தொழிற்சாலைகள் மட்டுமின்றி சிறிய தொழிற்சாலைகள் கூட கிடையாது. சிறு தொழில்களை நம்பித்தான் பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரம் இருந்து வருகிறது, சிறு தொழில்களில் பேக்கரி உணவு பொருட்களின் தயாரிப்பு தான் இந்த பகுதியில் அதிகம். இங்குள்ள நாடார் தெருவில் மட்டும் 100–க்கும் மேற்பட்ட இடங்களில் பேக்கரி பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தவிர ஜின்னா மைதானம், சிட்கோ, உப்புத்துறைபாளையம், தென்தாரை என பல இடங்களில் சிறு தொழில் மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த மையங்களில் பல ரக பிஸ்கெட்டுகள், ரொட்டிகள், வர்க்கி, கேக்குகள், மிக்சர், முறுக்கு, பலவகையான இனிப்புகள், கடலை மிட்டாய்கள், வறுத்த கடலை மற்றும் பருப்பு வகைகள், தானியங்களைக் கொண்டு செய்யப்பட்ட இனிப்பு உருண்டைகள் என பல உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் தாராபுரத்தைச் சுற்றியுள்ள பொள்ளாச்சி, உடுமலை, பழனி, மூலனூர், சின்னத்தாராபுரம், வெள்ளகோவில், முத்தூர், காங்கேயம், பல்லடம், திருப்பூர் என பல ஊர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த உணவுப் பொருட்களை மொத்தமாக வாங்கி, அங்குள்ள மளிகை கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள், பெட்டிக்கடைகள் போன்றவற்றில் விற்பனை செய்கிறார்கள். சிறு தொழிலில் தயாரிக்கப்படும் இந்த உணவுப் பொருட்கள் அனைத்தும், இதுவரை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து தான் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளதால். சிறு தொழிலில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 8 நாட்களாக இப்பகுதியில் உள்ள சிறு தொழில் மையங்கள் அனைத்தும் செயல்படாமல் மூடிக்கிடக்கிறது. சிறு தொழில்களை நம்பியிருந்தவர்கள் பலர் வேலையின்றி தவிக்கிறார்கள்.

இது குறித்து பேக்கரி உணவு பொருட்கள் தயாரிப்பவர்கள் கூறியதாவது:–

பேக்கரி பொருட்களை பாதுகாப்பாக விற்பனை செய்வதற்காகத்தான் முதன் முதலில் பிளாஸ்டிக் பைகள் கொண்டு வரப்பட்டது. காலப்போக்கில் எண்ணை, பால், தயிர், தண்ணீர் என அனைத்திற்கும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டிய நிலை உருவானது. இது போன்ற உணவு பொருட்களை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்ய முடியும். ஆனால் பேக்கரி பொருட்களை அப்படி விற்பனை செய்ய முடியாது.

பேக்கரி பொருட்கள் தயாரித்த ஓரிரு நாட்களில், காற்றின் ஈரப்பதம் காரணமாக கெட்டுவிடும். ஈரப்பதத்திலிருந்து பாதுகாப்பதற்காகத்தான் பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்தால், பேக்கரி பொருட்களை விற்பனை செய்ய முடியாது. மாற்று பைகளை உபயோகிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி, வியாபாரத்தில் ஈடுபடும்போது, தமிழ்நாட்டில் உள்ள சிறு தொழில் வியாபாரிகள் மட்டும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

இந்த பகுதியில் மட்டும் 100–க்கும் மேற்பட்ட சிறு தொழில் மையங்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. இதை நம்பியிருந்த சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. இதனால் 1,000 குடும்பங்கள் பாதிப்பட்டு, வாழ்வு இழந்து தவிக்கிறார்கள். காரணம் இந்த தொழிலைத் தவிர இவர்களுக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது.

நகராட்சி அதிகாரிகளிடம் எங்கள் நிலையை எடுத்துக்கூறி, பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதற்கு, அரசு விதிகளை தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால், எங்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என்று எங்களுக்கே தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் சிறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story