பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு ரே‌ஷன் கடை முன்பு விடிய, விடிய காத்திருந்த பொதுமக்கள்


பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு ரே‌ஷன் கடை முன்பு விடிய, விடிய காத்திருந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 9 Jan 2019 4:15 AM IST (Updated: 9 Jan 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பொங்கல் சிறப்பு பொருட்கள் வாங்க ரே‌ஷன் கடை முன்பு விடிய, விடிய வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். மேலும் கொட்டும் பனியிலும் இரவு நேரம் வீட்டிற்கு போகாமல் சாப்பாடு கொண்டு வந்து சாப்பிட்டனர்.

திருப்பூர்,

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வருகிற 15–ந்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு திட்டம் மற்றும் ரூ.1000–ஐ ரே‌ஷன் கடைகள் மூலம் தமிழக அரசு நேற்று முன்தினம் முதல் வழங்கி வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான ரே‌ஷன் கடைகளில் இந்த பரிசு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. நீண்ட வரிசையில் நின்று ரே‌ஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் மற்றும் ரூ.1000–ஐ வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் 48–வது வார்டுக்குட்பட்ட ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ரே‌ஷன் கடையிலும் நேற்று காலையில் இந்த சிறப்பு பொருட்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் காலையில் இருந்தே ஏராளமான பயனாளிகள் கடை முன்பு கூடினார்கள். பொருட்கள் அனைத்தும் வந்து சேராததால் மதியம் வழங்குவதாக ரே‌ஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால், மதியமும் பொருட்கள் வழங்கப்படவில்லை. மாலை 5 மணிக்கு வழங்கப்படும் என்று மீண்டும் அறிவித்ததை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு சென்ற ரே‌ஷன் கார்டுதாரர்கள் மாலை 5 மணியளவில் அங்கு வரிசையில் அமர்ந்து காத்திருந்தனர்.

இருப்பினும் பொங்கல் சிறப்பு பொருட்கள் வழங்கப்படவில்லை. இன்று(புதன்கிழமை) காலையில் தான் பொருட்கள் வரும் என்று ஊழியர்கள் தெரிவித்ததை தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து காத்திருந்த பொதுமக்கள், வரிசை கலைந்து விடாமல் இருக்க அப்படியே அங்கு உட்கார்ந்திருந்தனர். அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் விடியவிடிய அங்கேயே வரிசையில் காத்திருந்தனர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருந்து வரும் நிலையில், அதையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மூதாட்டிகள் தங்கள் சேலையால் தலையில் முக்காடு போட்டு கொண்டு அங்கேயே தரையில் அமர்ந்திருந்தனர்.

சிலர் தங்கள் உறவினர்களிடம் ‘டீ’ மற்றும் தண்ணீர், உணவு ஆகியவற்றை கொண்டு வர சொல்லி, அங்கேயே அமர்ந்து சாப்பிட்டனர். ஒருசிலர் பாய், சாக்குப்பை உள்ளிட்டவற்றையும் கையில் எடுத்து வந்திருந்தனர். பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக விடிய, விடிய பொதுமக்கள் காத்திருந்தது ஒருபுறம் இருந்தாலும், இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிலர் பரிதாபத்துடன் பார்த்தனர். சிலர் ‘பொங்கல் பொருட்களை விடிய, விடிய காத்திருந்து பெற்று கொள்ளும் அளவிற்கு நமது நாடு சென்று விட்டதா?’ என வசைபாடிய படியும் அந்த இடத்தை கடந்து சென்றனர். எது எப்படியோ, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பொங்கல் சிறப்பு பரிசை வாங்காமல் அங்கிருந்து நகர்ந்து செல்லமாட்டார்கள் என்ற முடிவில் வந்திருந்ததும் தெரிந்து கொள்ள முடிந்தது.

பொங்கல் சிறப்பு பொருட்கள் வாங்குவதற்காக மூதாட்டிகள், பெண்கள் என ஏராளமானோர் அங்கு காத்திருந்தனர். இதுமட்டுமின்றி அந்த பகுதியை சேர்ந்த நடக்க முடியாத மூதாட்டி ஒருவர் சக்கர நாற்காலியில் நேற்று மாலையில் இருந்தே அங்கு அமர்ந்திருந்தார். நடு இரவு வரை அங்கிருந்து அவர் செல்லவில்லை. ‘காலையில் பொருட்களை வாங்கி கொண்டு தான் செல்வேன்’ என்று கூறி அவரும் அங்கேயே விடிய, விடிய காத்திருந்தார்.


Next Story