வேலைநிறுத்த போராட்டம்: குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் பஸ்கள் ஓடின


வேலைநிறுத்த போராட்டம்: குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் பஸ்கள் ஓடின
x
தினத்தந்தி 9 Jan 2019 4:15 AM IST (Updated: 9 Jan 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்சங்கத்தினரின் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கிய நிலையிலும் குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் பஸ்கள் ஓடின.

நாகர்கோவில்,

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களும் நேற்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கின. குமரி மாவட்டத்திலும் பல்வேறு தொழிலாளர்கள், மத்திய- மாநில அரசு பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

ஆனாலும் நேற்று குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் ஓடின. கடைகள் திறந்து இருந்தன. வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆட்டோ, வேன், கார் தொழிலாளர்களைத்தவிர பிற ஆட்டோ, கார், வேன், லாரி போன்ற வாகனங்களும் ஓடின. தொலைத்தொடர்புத்துறை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தபால்துறை ஊழியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள் ஆகியோர் பெருமளவு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் வங்கிகள், தொலைபேசி நிலையங்கள், தபால் அலுவலகங்கள் உள்ளிட்டவை ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன. இதனால் தபால் பட்டுவாடா பணிகள், வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

இதையொட்டி தொழிற்சங்கங்கள் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணைச்செயலாளர் அந்தோணி, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ஞானதாஸ், ஏ.ஐ.டியு.சி. மாவட்ட செயலாளர் அனில்குமார், ஏ.ஐ.சி.சி.டியு. மாநில துணைத்தலைவர் அந்தோணிமுத்து, எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் முத்துக்கருப்பன், எம்.எல்.எப். மாவட்ட தலைவர் மகராஜபிள்ளை பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல் குமரி மாவட்ட அனைத்து ஆட்டோ சங்க கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கூட்டுக்குழு அமைப்பாளர் சிவகோபன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் மகேஷ் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆட்டோ தொ.மு.ச. தலைவர் உதயகுமார் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் நாகர்கோவில் வாட்டர்டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

இதேபோல் தக்கலை பஸ் நிலையம் அருகில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற 55 பெண்கள் உள்பட 97 பேர் கைது செய்யப்பட்டனர். மேல்புறம் சந்திப்பில் நடந்த விவசாய தொழிலாளர்கள் சார்பில் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 6 பெண்கள் உள்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் நேற்று வழக்கம்போல் அனைத்து பஸ்களும் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்பட்டன. ஆனால் திருவனந்தபுரத்துக்கு செல்லக்கூடிய பஸ்கள் களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டன“ என்றார்.

இதேபோல் நாகர்கோவில் தலைமை தபால் நிலையமும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது. நாகர்கோவில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், முக்கிய சந்திப்புகள், அரசு போக்குவரத்துக்கழக டெப்போக்கள், மத்திய- மாநில அரசு அலுவலகங்கள் அனைத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இன்றும் (புதன்கிழமை) 2-வது நாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

Next Story