விபத்தில் மூளைச்சாவு: மகன் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய தாயாருக்கு உதவித்தொகை நெல்லை கலெக்டர் ஷில்பா நேரில் ஆணை வழங்கினார்


விபத்தில் மூளைச்சாவு: மகன் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய தாயாருக்கு உதவித்தொகை நெல்லை கலெக்டர் ஷில்பா நேரில் ஆணை வழங்கினார்
x
தினத்தந்தி 9 Jan 2019 5:00 AM IST (Updated: 9 Jan 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய தாயாருக்கு முதியோர் உதவித்தொகை ஆணையை அவரது வீட்டிற்கு நேரில் சென்று கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் பாபநாசம் டாணா காளிபார்விளையை சேர்ந்த கணபதி மகன் பழனிக்குமார் (வயது 35). எம்.காம். பட்டதாரியான இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தாயார் சாரதாவுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்த பழனிக்குமார் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பழனிக்குமார் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து பழனிக்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவருடைய தாயார் சாரதா முன்வந்தார். பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அதில் ஒரு சிறுநீரகம் அங்குள்ள நோயாளிக்கும், மதுரை ஆஸ்பத்திரியில் இருக்கும் நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும், சென்னையில் உள்ள ஒரு நோயாளிக்கு இதயமும், திருச்சி ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிக்கு கல்லீரலும் பொருத்தப்பட்டது.

சாரதாவின் கணவர் கணபதி ஏற்கனவே விபத்தில் இறந்து விட்டார். இதனால் சாரதாவுக்கு பழனிக்குமார் மட்டுமே ஆதரவாக இருந்தார். பழனிக்குமார் வேலைக்கு சென்று தாயை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் பழனிக்குமாரும் விபத்தில் சிக்கி இறந்து விட்டதால், தனக்கு தமிழக அரசு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம், சாரதா கோரிக்கை மனு கொடுத்தார்.

அவரது மனுவை பரிசீலித்த கலெக்டர் ஷில்பா, முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்தார். அதிகாரிகள் மூலம் முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை உடனடியாக தயார் செய்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை கலெக்டர் ஷில்பா, டாணாவில் உள்ள சாரதாவின் வீட்டிற்கு நேரில் சென்றார். அங்கு சாரதாவை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், மாதந்தோறும் ரூ.1,000 பெறுவதற்கான முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினார். இந்த சம்பவம் சாரதா குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மனித நேயத்துடன் மனு கொடுத்த உடனே உதவித்தொகை ஆணையை நேரில் சென்று வழங்கிய கலெக்டரை சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.

Next Story