மாவட்டத்தில் தடையை மீறி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் - 336 பேர் கைது


மாவட்டத்தில் தடையை மீறி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் - 336 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2019 4:15 AM IST (Updated: 9 Jan 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 336 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று நாடு முழுவதும் போராட்டம் நடந்த நிலையில், கடலூர் மாவட்டத்திலும் போராட்டம் நடந்தது. மேலும் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

அதன்படி, கடலூர் உழவர் சந்தை அருகில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் சி.ஐ.டி.யு., தொ.மு.ச., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என். டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் ஒன்று திரண்டு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அண்ணாபாலம் அருகே வந்த போது, கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தொழிற்சங்கத்தினர் சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடலூர்-புதுச்சேரி இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பாஸ்கர், மாநில பொதுச் செயலாளர் குமார், மாவட்ட செயலாளர் கருப்பையா, தொ.மு.ச. நிர்வாகிகள் பொன்முடி, சுகுமார், ஏ.ஐ.டி.யு.சி. குளோப், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் பலராமன் உள்பட 190 பேரை போலீசார் கைது செய்து திருப்பாதிரிப்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

336 பேர் கைது

அதேபோல் புவனகிரி தாலுகா அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் 56 பேர், கீரப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் செல்லையா தலைமையில் 40 பேர், காட்டுமன்னார்கோவில் பஸ்நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் சின்னதுரை தலைமையில் 50 பேர் என மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 336 பேரை போலீசார் கைது செய்தனர்.

மின்சார ஊழியர்கள்

தமிழ்நாடு மின் ஊழியர் ஜனநாயக முன்னணி சார்பில் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் முருகையன், பொருளாளர் பாவாடை சாமி ஆகியோர் பேசினர். மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். மாணவர் அணி நிர்வாகிகள் வெங்கடேஸ்வரன், கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மின்சார சட்டத்தை திருத்துவதை கண்டித்தும், பொதுத்துறைகளை பாதுகாத்திட வேண்டும் என்பது உள்ளிட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மின் ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

மாவட்டத்தில் உள்ள 7 கோட்ட அலுவலகங்களிலும் 3 ஆயிரம் மின் ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகவும், இவர்களில் 1,010 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

தபால் ஊழியர்கள்

கோட்ட தபால் ஊழியர் சங்கங்களின் இணைப்பு குழு கடலூர் கோட்டம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் முன்பு தேசிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் சம்பத்குமரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் 320 தபால் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 620 தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தினக்கூலி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு செயலாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் பி.எஸ்.என்.எல். ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் உள்ள 168 தொலைபேசி நிலையங்களில் பணிபுரிந்து வரும் 720 ஊழியர்களில் 520 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டதாக தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறினார்.

மத்திய, மாநில அரசு ஊழியர்களின் போராட்டம் காரணமாக அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. சில அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே ஊழியர்கள் அமர்ந்திருந்தனர். சில அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் அலுவலக பணி காரணமாக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். போராட்டம் தொடர்ந்து இன்றும்(புதன்கிழமை) நீடிப்பதால் பணிகள் பெரிதும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

தொழிற்சங்கங்கள் விடுத்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு வங்கி ஊழியர் மற்றும் காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து ஈடுபட்டு வருகிறார்கள். கடலூர் மாவட்டத்திலும் வங்கி மற்றும் காப்பீட்டு கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர். கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஆயுள் காப்பீட்டு கழக அலுவலகம் முன்பு வங்கி மற்றும் காப்பீட்டு கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தாலுகா வங்கி ஊழியர் சங்க செயலாளர் மீரா, காப்பீட்டு கழக ஊழியர் சங்க கிளை செயலாளர் சுகுமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஓய்வுபெற்ற காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சம்பந்தம், ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் சங்க ரமணி, வேலூர் கோட்ட துணை தலைவர் மணவாளன் ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினார்கள். இதில் மாவட்டத்தில் உள்ள 5 ஆயுள் காப்பீட்டு கழக அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 200 ஊழியர்கள் பங்கேற்றனர்.

அதேபோல் வங்கிகளை பொறுத்தவரை பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காததால் அந்த வங்கிகள் வழக்கம்போல் செயல்பட்டன. இதர வங்கிகளில் அதிகாரிகள் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். இதனால் வங்கிகள் திறந்திருந்தாலும் பணபரிவர்த்தனை எதுவும் நடைபெறவில்லை. இதனால் சுமார் ரூ.20 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த வேலைநிறுத்தத்தில் மாவட்டம் முழுவதும் 150 வங்கி கிளைகளில் பணிபுரிந்து வரும் 600 ஊழியர்கள் பங்கேற்று இருப்பதாகவும் வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

Next Story