கொடைக்கானலில் ஆயுத பயிற்சி மேற்கொண்ட வழக்கு, திண்டுக்கல் கோர்ட்டில் 5 மாவோயிஸ்டுகள் ஆஜர்
கொடைக்கானலில் ஆயுத பயிற்சி மேற்கொண்ட வழக்கில் திண்டுக்கல் கோர்ட்டில் 5 மாவோயிஸ்டுகள் ஆஜராகினர்.
திண்டுக்கல்,
கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி வனப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அதிரடிப்படை போலீசார் விரைந்து சென்று, அவர்களை சுற்றிவளைத்தனர். மேலும் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் நவீன்பிரசாத் என்ற மாவோயிஸ்டு கொல்லப்பட்டார். ஆனால் பெண்கள் உள்பட 7 பேர் தப்பியோடி விட்டனர். மேலும் துப்பாக்கிகள், தோட்டாக்கள், பேட்டரிகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் தேடி வந்தனர். இதற்கிடையே தப்பியோடிய 7 பேரும் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இதில் நீலமேகம், ரஞ்சித் ஆகியோர் ஜாமீனில் வெளியே சென்று விட்டனர்.
மேலும் ரீனாஜாய்ஸ்மேரி வேலூர் சிறையிலும், செண்பகவல்லி புழல் சிறையிலும், பகத்சிங் சேலம் சிறையிலும், காளிதாஸ் கேரளா சிறையிலும், கண்ணன் கோவை சிறையிலும் உள்ளனர்.
இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி மேற்கொண்ட வழக்கு, திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ரீனாஜாய்ஸ்மேரி, செண்பகவல்லி, பகத்சிங் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் ஜாமீனில் வெளியே இருக்கும் நீலமேகம், ரஞ்சித் ஆகியோரும் ஆஜராகினர். ஆனால் காளிதாஸ், கண்ணன் ஆகியோரை போலீசார் அழைத்து வரவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி முரளிசங்கர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story