அம்ரிதா எக்ஸ்பிரஸ் இணைப்பு ரெயிலுக்கு பதிலாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படாத புதிய ரெயில், கேரளாவுக்காக இயக்கப்படுகிறது


அம்ரிதா எக்ஸ்பிரஸ் இணைப்பு ரெயிலுக்கு பதிலாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படாத புதிய ரெயில், கேரளாவுக்காக இயக்கப்படுகிறது
x
தினத்தந்தி 8 Jan 2019 11:00 PM GMT (Updated: 8 Jan 2019 10:33 PM GMT)

கேரள பயணிகளின் வசதிக்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்படாமல் தென்னக ரெயில்வேயில் அம்ரிதா எக்ஸ்பிரஸ் இணைப்பு ரெயிலுக்கு பதிலாக புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.

மதுரை,

மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக திருவனந்தபுரத்துக்கு தினசரி அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் (வ.எண்.16344) மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.55 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயில் சொரனூர் ரெயில் நிலையத்தில் பாதியாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி நிலாம்பூருக்கும், ஒரு பகுதி திருவனந்தபுரத்துக்கும் இயக்கப்படுகிறது. அதேபோல, திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை புறப்படும் ரெயிலின்(வ.எண்.16343) ஒரு பகுதி சொரனூர் ரெயில்நிலையத்தில் பிரிக்கப்பட்டு நிலாம்பூருக்கும், ஒரு பகுதி மதுரைக்கும் இயக்கப்படுகிறது.

இதனால் இந்த ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க முடியாத நிலையில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். அதனை தொடர்ந்து தனி ரெயில் இயக்க வேண்டும் என்ற கேரள மாநில பயணிகளின் கோரிக்கையை ரெயில்வே அமைச்சகமும், தென்னக ரெயில்வேயும் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, இந்த ரெயில் இன்று முதல்(புதன்கிழமை) தனித்தனி ரெயிலாக இயக்கப்படுகிறது.

அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 10 மணிக்கு மதுரை புறப்படும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் இரவு 10.30 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மறுநாள் காலை 5.45 மணிக்கு பதிலாக 5.25 மணிக்கு சொரனூர் ரெயில் நிலையம் சென்றடைகிறது. பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு காலை 9 மணிக்கு பதிலாக காலை 8 மணிக்கு வந்தடைகிறது. மதுரை ரெயில்நிலையத்துக்கு மதியம் 1.10 மணிக்கு பதிலாக மதியம் 12.20 மணிக்கு வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில், பொள்ளாச்சி ரெயில்நிலையத்துக்கு இரவு 7.45 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கு சென்றடைகிறது. சொரனூர் ரெயில் நிலையத்துக்கு இரவு 11.30 மணிக்கு பதிலாக இரவு 10.55 மணிக்கு சென்றடைகிறது. திருவனந்தபுரம் ரெயில் நிலையத்துக்கு மறுநாள் காலை 6.55 மணிக்கு சென்றடைவதற்கு பதிலாக அதிகாலை 5.25 மணிக்கு சென்றடைகிறது.

அதேபோல, அம்ரிதா எக்ஸ்பிரஸ் இணைப்பு ரெயிலுக்கு பதிலாக புதிதாக கொச்சுவேலி ரெயில்நிலையத்தில் இருந்து ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16349) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 6 மணிக்கு சொரனூர் ரெயில் நிலையம் சென்றடைகிறது. காலை 7.20 மணிக்கு நிலாம்பூர் ரெயில்நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் நிலாம்பூர் ரெயில்நிலையத்தில் இருந்து (வ.எண்.16350) இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 11.25 மணிக்கு சொரனூர் ரெயில்நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 6.25 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில்நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாமல், கேரள பயணிகளின் கோரிக்கையை ஏற்று, தென்னக ரெயில்வே நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில், மத்திய ரெயில்வே அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழக ரெயில்வே திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. குறிப்பாக நாகர்கோவில்–கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் மணியாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி–கோவை இணைப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை தனித்தனியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.


Next Story