கீழக்கரை அருகே பழமையான கற்கோடாரி கண்டுபிடிப்பு
கீழக்கரை அருகே பழமையான கற்கோடாரியை அரசு பள்ளி மாணவர்கள் கண்டெடுத்தனர்.
ராமநாதபுரம்,
கீழக்கரை அருகே உள்ள வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த கவியரசன், விஷால், வினித், காளீசுவரன், யுவராஜ், அருள்தாஸ் ஆகிய மாணவர்கள் வரலாற்று தேடலில் ஆர்வம் உள்ளவர்கள். இவர்கள் நத்தம் என்ற ஊரில் ஒரு கற்கோடாரியை கண்டெடுத்து அதை மன்ற பொறுப்பாசிரியர் செல்வக்குமார், கணித ஆசிரியர் முனியசாமி ஆகியோரிடம் அளித்தனர். மேலும் இதுபற்றி ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மை பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜகுருவுக்கு தகவல் தந்தனர். இதுகுறித்து ராஜகுரு கூறியதாவது:–
இந்த மாணவர்கள் நத்தம், குளபதம் ஆகிய இரு ஊர்களுக்கு இடையில் உள்ள சுப்பாத்தா குளத்தின் மேற்குக்கரையில் ஒரு தோப்பில் பண்ணைக்குட்டை தோண்டிய இடத்தில் கற்கோடாரியை கண்டெடுத்துள்ளனர். அப்பகுதியில் மாணவர்களுடன் மீண்டும் நாங்கள் ஆய்வு செய்தபோது பானை ஓடுகள், இரும்புத்துண்டு, அரைப்புக்கல், வட்டச்சில்லுகள், மான் கொம்பின் உடைந்த பகுதிகள், மணி செய்யும் கற்கள் ஆகியவற்றை கண்டெடுத்தோம்.
சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பகுதி முழுவதும் பழமையான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் காணப்படுகின்றன. இங்கு கிடைத்த கற்கோடாரி சங்க காலத்தை சேர்ந்தது. கருங்கல்லால் ஆன கற்கோடாரியை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி உள்ளனர். இதன் அகன்ற வெட்டும் பகுதியின் முனை மழுங்கியுள்ளது. மரத்தாலான தடியில் கட்டி இதை பயன்படுத்துவார்கள். இது சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. புதிய கற்காலத்தில் பயன்பாட்டில் இருந்த இந்த கற்கோடாரியை சங்க காலத்திலும் தொடர்ந்து பாதுகாத்து வந்திருக்கலாம். கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் கிடைப்பதன் மூலம் சங்ககாலத்தில் மக்கள் குடியிருப்பாக வைகை ஆற்றின் கரையில் அமைந்த ஒரு ஊராக இருந்துள்ளதை அறியமுடிகிறது.
புதிய கற்கால கருவிகள் தென் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் போகலூரில் சங்ககால வாழ்விடப்பகுதியில் ஒரு கற்கோடாரியை 2017–ல் கண்டெடுத்துள்ளனர். எனவே தொல்லியல் துறை இப்பகுதியில் அகழாய்வு செய்து கீழக்கரை பகுதியின் சங்ககால தொடர்பை வெளிக்கொணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரலாற்று தடயங்களை தேடி கண்டுபிடித்த மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.