தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: சி.பி.ஐ. இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு; பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: சி.பி.ஐ. இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு; பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Jan 2019 4:30 AM IST (Updated: 9 Jan 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. இயக்குனர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தூத்துக்குடியை சேர்ந்த அர்ச்சுனன் உள்பட 7 பேர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 22.5.2018 அன்று ஊர்வலம் நடந்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட்டு, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் பதிவு செய்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி 14.8.2018 அன்று உத்தரவிட்டது. மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகார்களின் அடிப்படையிலும் வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே, துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு 29.5.2018 அன்று புகார் மனு அனுப்பினோம். மதுரை ஐகோர்ட்டு உத்தரவு நகல் கடந்த ஆகஸ்டு மாதம் 31–ந்தேதி சி.பி.ஐ. போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிப்காட் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை மட்டும் அடிப்படையாக கொண்டு சி.பி.ஐ. போலீசார் மீண்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

போலீசார் மீது நாங்கள் கொடுத்த புகார் அடிப்படையில் அவர்கள் வழக்குபதிவு செய்யவில்லை. இது கோர்ட்டு உத்தரவை அவமதிப்பதாகும். இதுகுறித்து சி.பி.ஐ. இணை இயக்குனர் பிரவீன் சின்காவுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத சி.பி.ஐ. இணை இயக்குனர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “துப்பாக்கிச்சூடு தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் போலீஸ் அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் பலருடைய பெயர் இடம் பெறவில்லை. அடையாளம் தெரியாதவர்கள் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது“ என்று வாதாடினார். விசாரணை முடிவில், இதுகுறித்து சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story