மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமனம் தாமதம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம் 2 மாதங்களுக்கு மேல் காலியாக உள்ள நிலையில் அதனை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடி கட்டுப்பாட்டில் போலீஸ் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இன்ஸ்பெக்டர் தலைமையில் இயங்கி வரும் இந்த பிரிவில் மாவட்டம் முழுவதும் தனிப்பிரிவு போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர்கள் மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகளை முறையாக கண்காணிக்க இந்த தனிப்பிரிவின் பணி மிக அத்யாவசியமானதாகும். குறிப்பாக கிராமப்புறங்களில் அன்றாட நிகழ்வுகளை கண்காணித்து சாதிமோதல் உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி முன்கூட்டியே அறிந்து போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவிப்பதன் மூலம் சட்டம்–ஒழுங்கு கண்காணிப்பில் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க வாய்ப்பு ஏற்படும். மேலும் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை முறைப்படுத்த வேண்டியதும் இத்தனிப்பிரிவு அதிகாரிகள்தான்.
அடுத்த 2 மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்ற நிலையில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்த திட்டத்தினை முன்கூட்டியே வகுத்து பிரச்சினைக்குரிய பகுதிகள் எவை, எவை என்று கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியது எத்தனை இடங்கள் என்பதை கண்டறிந்து பாதுகாப்பு பணிக்காக தேவைப்படும் போலீசாரின் எண்ணிக்கையை வரையறுக்க வேண்டியது இத்தனிப்பிரிவின் தலையாய பணியாகும். தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இந்தநிலையில் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய தனிப்பிரிவில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாறுதல் ஆகி சென்ற பின்னர் அந்த பணி இடத்துக்கு இதுவரை யாரும் நியமனம் செய்யப்பட வில்லை. மாவட்டத்தில் சட்டம்–ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவரின் பெயர் இப்பணியிடத்துக்கு பரிந்துரை செய்யப்பட்ட போதிலும் அந்த பரிந்துரை தென்மண்டல உயர் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் தற்போது பொறுப்பு அதிகாரியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டரே நியமிக்கப்பட்டுள்ளார். பொதுவாக தனிப்பிரிவில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்–இன்ஸ்பெக்டராக நியமிக்கப்படுபவர்கள் போலீஸ் தனிப்பிரிவில் செயல்பட தேவையான பயிற்சி பெற்று இருக்க வேண்டும். ஆனால் சமீபகாலமாக இந்த நடைமுறை முறையாக பின்பற்றப்படவில்லை.
எனவே அடுத்தடுத்து நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் பரந்து விரிந்த இந்த மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீசாரின் பணி மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டிய நிலையில் இப்பிரிவினை கண்காணிக்க வேண்டிய இன்ஸ்பெக்டர் பணியிடத்தை தகுதி உள்ள அதிகாரியை கொண்டு நிரப்பிட தென் மண்டல போலீஸ் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடத்துக்கு வெளி மாவட்டங்களில் பணியாற்றிய தகுதி உள்ள நபர்கள் நியமிக்கப்பட்டதும் உண்டு. எனவே இதை கருத்தில் கொண்டு தென்மாவட்ட போலீஸ் நிர்வாகம் இப்பணியிட நியமனத்தில் தாமதத்தை தவிர்க்க வேண்டியது அவசியம் ஆகும்.