ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழை இலைக்கு ’மவுசு’ அதிகரிப்பு


ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழை இலைக்கு ’மவுசு’ அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2019 4:15 AM IST (Updated: 9 Jan 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழை இலையின் தேவைஅதிகரித்துள்ளதால் விலையும் உயர்ந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

எங்கும் பிளாஸ்டிக் மயம் என்று இருந்த நிலையில் அதில் ஓரளவுக்கு ‘செக்’ வைக்கும் வகையில் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து இருக்கிறது. இதில் பாலிதீன் கவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூரை பொருத்தவரை அந்த நகருக்கென்ற பிரசித்தி பெற்ற பால்கோவா, பால் அல்வா மற்றும் அல்வாவை கடைகளில் பிளாஸ்டிக் தாள்களில் வைத்து வழங்கி வந்தனர்.

ஆனால் தற்போது வாழை இலையில் வைத்து விற்பனை செய்யவேண்டிய நிலை உருவாகி விட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தேக்கு இலை, வாழை இலைகளில் வைத்து விற்றோம். பழையன திரும்புவது மகிழ்ச்சியே என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வாழை இலையில் வைத்து தரும் பால்கோவா தனி ருசியாக இருக்கிறது என்று பலர் திருப்தி தெரிவிக்கின்றனர்.

ஓட்டல்கள், இறைச்சிக்கடைகளில் பிளாஸ்டிக் ஓரம் கட்டப்பட்டு விட்டது. பாத்திரங்கள் கொண்டு வந்து சாப்பாடு உள்ளிட்டவற்றை வாங்கிச்செல்லுங்கள் என்று அறிவிப்பு பலகையில் எழுதி வைத்துள்ளார்கள். இதேபோல ஆண்டாள் கோவில், சந்தனமாரியம்மன்கோவில்,சீனிவாச பெருமாள் கோவில், வைத்தியநாதசாமி கோவில், பெரிய மாரியம்மன் கோவில் பகுதிகளில் உள்ள பூவியாபாரிகள் பக்தர்களுக்கு பூக்களை பாலிதீன் பைகளில் போட்டு கொடுத்து வந்தனர். இப்போது இவர்களும் வாழை இலைக்கு மாறிவிட்டனர். இதனால் கோவில் வளாக பகுதிகளில் இந்தவகையிலான குப்பைகளை இப்போது காண இயலவில்லை.

இப்படியாக பாரம்பரியமிக்க வாழை இலைக்கு தனி மவுசு வந்து விட்டதால் அதன் விலையும் உயர்ந்து விட்டது. வழக்கமாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 100 இலைகள் கொண்ட வாழை இலை கட்டுகளில் முன்பு 50 முதல் 100 கட்டுகள் வரையே விற்பனையாகும் நிலை இருந்தது. ஆனால் அதன் விற்பனை அமோகமாக உயர்ந்து இப்போது சராசரியாக 200 கட்டு முதல் 250 கட்டு வரை விற்பனையாகிறது.

மேலும் விலையும் உயர்ந்து விட்டது. 5 இலைகளை கொண்ட ஒரு பூட்டு வாழை இலை முன்பு ரூ.5 முதல் ரூ.10 வரை இருந்த நிலையில் ரூ.15 ஆக இப்போது உயர்ந்து இருக்கிறது. இது விவசாயிகளை சந்தோ‌ஷப்படுத்தி இருக்கிறது.

வாளிகள் இருந்தால்தான் ஓட்டல்களுக்கு செல்ல முடியும், இறைச்சி வாங்க முடியும் என்ற நிலை வந்து விட்டதால் பாத்திரக்கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். பாத்திரக்கடைகளின் முன்பகுதியை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் எல்லாம் இப்போது கடையில் உள்பகுதிக்கு இடம் மாறிவிட்டன.

அனைத்து பாத்திரக்கடைகளின் முன்பகுதியிலும் விதவிதமான எவர்சில்வர் வாழிகளை தொங்கவிட்டு விற்பனையை அதிகரித்து வருகின்றனர். பொங்கல் சீர் கொடுக்க பாத்திரம் வாங்க வருவோரில் பலர் தங்கள் மகளுக்கு சீதனமாக கொடுக்க இந்த மாதிரியான பொருட்களை வாங்கிச்செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தூக்குவாளிகள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டு இருந்த நிலையில் அவற்றின் தேவை இப்போது அத்தியாவசியமாகிவிட்டது. ரூ.55 முதல் ரூ.180 வரை பலவகையான வாளிகள் விற்பனைக்கு வந்துள்ளன.


Next Story