கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள், வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்தம்; பண பரிவர்த்தனை முடங்கியது


கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள், வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்தம்; பண பரிவர்த்தனை முடங்கியது
x
தினத்தந்தி 9 Jan 2019 4:30 AM IST (Updated: 9 Jan 2019 4:23 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள், வங்கி, இன்சூரன்ஸ் பணியாளர்கள் சார்பில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

மதுரை,

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். அதன்படி, ரெயில்வே, தபால்துறை, வருமானவரித்துறை, சுங்கவரித்துறை, ஜி.எஸ்.டி. துறை, மத்திய பொதுப்பணித்துறை, பொதுத்துறை வங்கிகள், எல்.ஐ.சி., நியூ இந்தியா இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நே‌ஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆகியன நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.

இதில், ரெயில்வே துறையில் மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் மட்டும் பாதிக்கும் மேற்பட்டோர் பணிக்கு வந்திருந்தனர். பிற மத்திய அரசு அலுவலகங்கள் ஊழியர்களே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டன.

ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. அத்துடன், அந்தந்த அரசு அலுவலகங்களின் தலைமை அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, ஸ்காட் ரோடு தலைமை தபால்நிலையம், எல்.ஐ.சி. மண்டல அலுவலகம், வருமானவரித்துறை அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கி மதுரை மெயின் அலுவலகம் ஆகியவற்றின் நுழைவுவாயில் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

அப்போது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணி ஒப்பந்தம் வழங்கக்கூடாது, வங்கிகள் இணைப்புத்திட்டத்தை கைவிட வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பணத்தை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கக்கூடாது. மேலும், இன்சூரன்ஸ் நிறுவன பணத்தை கட்டுமான வளர்ச்சித்திட்டங்கள் தவிர பிற இனங்களில் முதலீடு செய்யக்கூடாது. வராக்கடன்களை வசூலிக்க வேண்டும். புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால், மதுரை மாவட்டத்தில் நேற்று ரூ.பல நூறு கோடிகளுக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் தபால்துறை வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் பஸ், ரெயில்கள் வழக்கம் போல ஓடின. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அத்துடன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


Next Story