முழுஅடைப்பின்போது அரசு ஊழியர்கள் போராட்டம்


முழுஅடைப்பின்போது அரசு ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2019 4:45 AM IST (Updated: 9 Jan 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் முழுஅடைப்பின்போது அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து நேற்று புதுவையில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இந்தநிலையில் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய மகா சம்மேளனத்தின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், புதுவை அரசு ஊழியர் சம்மேளனம் முன்வைத்துள்ள 33 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்திருந்தது.

அதன்படி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தினர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிகளை புறக்கணித்த அவர்கள் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணாவுக்கு சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கிறிஸ்டோபர், மோகனகிருஷ்ணன், செல்வன், கீதா, சீத்தாராமன், முனீந்திரபாபு, இளங்கோ, வாசுதேவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பினர் கம்பன் கலையரங்கம் அருகே கூடினார்கள். அங்கிருந்து ஊர்வலமாக செல்ல திட்டமிட்டனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் பொதுச்செயலாளர் லட்சுமணசாமி தலைமையில் அங்கேயே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கக்கூடாது, புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எல்.ஐ.சி. ஊழியர்கள் சாரத்தில் உள்ள அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை தலைவர் செந்தில் அழகுமணி தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன் உள்பட நிர்வாகிகள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதேபோல் பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர்களும், வருமான வரித்துறை அலுவலகம் முன்பு வருமான வரித்துறை ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருமான வரித்துறை ஊழியர்களின் போராட்டத்துக்கு சங்க செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். புதுவை கிளை தலைவர் ஹசன் அலி ஜாகிர் தொடங்கிவைத்தார். மண்ட செயலாளர் கிஷோர், புதுவை கிளை பொருளாளர் அரவிந்தநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் வங்கி ஊழியர் சங்கத்தினரும் நேற்றைய போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் வங்கி பணிகளும் பாதிக்கப்பட்டன. பெரும்பலான மத்திய அரசு நிறுவனங்களில் ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் குறைந்த அளவு ஊழியர்களுடன் அந்த நிறுவனங்கள் இயங்கின.


Next Story