தொழிற்சங்கத்தினர் 11 இடங்களில் மறியல் போராட்டம் 854 பேர் கைது


தொழிற்சங்கத்தினர் 11 இடங்களில் மறியல் போராட்டம் 854 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2019 4:30 AM IST (Updated: 9 Jan 2019 8:17 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் 11 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 854 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்களும் இணைந்து 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கின. நேற்று 2–வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. குமரி மாவட்டத்திலும் பல்வேறு தொழிலாளர்கள், மத்திய– மாநில அரசு பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

ஆனாலும் கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் ஓடின. வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆட்டோ, வேன், கார் தொழிலாளர்களைத்தவிர பிற ஆட்டோ, கார், வேன், லாரி போன்ற வாகனங்களும் ஓடின. கடைகள் திறந்து இருந்தன.

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தபால்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் வங்கிகள், தொலைபேசி நிலையங்கள், தபால் அலுவலகங்கள் உள்ளிட்டவை ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன. இதனால் தபால் பட்டுவாடா, வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

தொழிற்சங்கங்கள் சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள இந்தியன் வங்கி கிளை முன்பு சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச., எச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. முன்னதாக போராட்ட விளக்க கூட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் தலைமை தாங்கினார். எல்.பி.எப். மாநில துணை செயலாளர் இளங்கோ, ஐ.என்.டி.யு.சி. செயலாளர் முருகேசன், எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் முத்துக்கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், தி.மு.க. நிர்வாகிகள் பெர்னார்டு, கேட்சன், வக்கீல் மகேஷ், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் செல்லசுவாமி, நிர்வாகிகள் அந்தோணி, ஏ.ஐ.டி.யு.சி. இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். பின்னர் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கேப் ரோட்டில் இந்தியன் வங்கி முன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 50 பேர் பெண்கள் ஆவர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் கோட்டார் பகுதியில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேபோல் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு  சங்க மாவட்ட துணைச்செயலாளர் சந்திரகலா தலைமை தாங்கினார்.

இதில் நிர்வாகிகள் விஜயலெட்சுமி, சரஸ்வதி, சரோஜினி உள்பட பலர் கலெக்டர் அலுவலகம் முன்புறமுள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 86 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருங்கல் ராஜீவ்காந்தி சிலை சந்திப்பில் தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி சோபனராஜ் தலைமை தாங்க, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டென்னிஸ், தி.மு.க.வை சேர்ந்த சத்தியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், மனோதங்கராஜ், முன்னாள் எம்.பி. பெல்லார்மின் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். இதில் தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். அப்போது, அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து 5 பெண்கள் உள்பட 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

அருமனையில் மாவட்ட ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் ஆமோஸ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுட்ட 21 பெண்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆரல்வாய்மொழியில் தி.மு.க. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் மாடசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென நாகர்கோவில்–நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 53 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொல்லங்கோடு கண்ணாகம் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 42 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 11 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 854 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 287 பேர் பெண்கள் ஆவர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் நாகர்கோவில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், முக்கிய சந்திப்புகள், அரசு போக்குவரத்துக்கழக டெப்போக்கள், மத்திய– மாநில அரசு அலுவலகங்கள் அனைத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Next Story