2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்: சாலை மறியலில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் 614 பேர் கைது
வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த 614 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், குறைந்த பட்ச கூலியாக மாதம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும், மத்திய-மாநில பொதுத்துறைகளின் பங்கு விற்பனைகளை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு மத்திய தொழிற்சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்
அதன்படி நேற்று முன்தினம் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர், அகில இந்திய அஞ்சலக ஊழியர்கள் சங்கத்தினர் உள்பட பல்வேறு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதற்கு ஆதரவாக வேலூரில் வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தபால்துறை ஊழியர்கள், எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் கலெக்டர் அலுவலக வளாகம், தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், தபால் நிலையங்கள், சில வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் காசிநாதன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சிம்புதேவன் முன்னிலை வகித்தார். இதில், புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் மத்திய தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக சென்று தலைமை தபால் நிலையம் முன்பாக அண்ணாசாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி, அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் வேலூர், கலவை, ராணிப்பேட்டை, குடியாத்தம், ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய 6 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மொத்தம் 614 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மத்திய அரசு ஊழியர்களின் 2-வது நாள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சில வங்கி ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு காணப்பட்டது. அரசு அலுவலகங்களுக்கு கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வேலூரில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம்போல் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story