கடையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் துணிப்பை கொண்டு செல்ல வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு


கடையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் துணிப்பை கொண்டு செல்ல வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு
x
தினத்தந்தி 10 Jan 2019 4:15 AM IST (Updated: 10 Jan 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

கடையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் துணிப்பை கொண்டு செல்ல வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

சாயர்புரம், 

புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசல் டி.டி.டி.ஏ. அபிஷேகநாதர் மேல்நிலைப்பள்ளியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பல்வேறு துறைகள் மூலம் 57 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.7 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ராஜ் ஜீத் சிங் கலோன் முன்னிலை வகித்தார். முகாமில் முதல்-அமைச்சர், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அனுப்பிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து கடிதம் சுய உதவிக்குழுவினரிடம் வழங்கப்பட்டது.

முகாமில் கலெக்டர் பேசியதாவது:-

தமிழக அரசு, அலுவலர்களை மக்கள் இருப்பிடத்துக்கு சென்று ஒவ்வொரு மாதமும் கிராமங்களில் மனுநீதி நாள் முகாம் நடத்த அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில், மனுநீதி நாள் முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தகுதியான நபர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 56 மனுக்கள் பெறப்பட்டது. இதல் 25 மனுக்கள் ஏற்கப்பட்டு தீர்வு காணப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 31 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், நலத்திட்ட உதவிகள் எவ்வாறு பெற வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்து கூறி வருகின்றனர். அரசின் திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பெற்று பயன்பெற வேண்டும். தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தடை விதித்து உள்ளது. எனவே, பொதுமக்கள் கடைகளுக்கு அல்லது வெளியே சென்று பொருட்கள் வாங்கும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். குலையன்கரிசல் பஞ்சாயத்து பகுதியில் ரூ.17 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் சங்கரநாராயணன், மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் மகாதேவன், மாவட்ட சமூகநல அலுவலர் தனலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story