மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது திருவாரூரில், மு.க.ஸ்டாலின் பேச்சு


மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது திருவாரூரில், மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 10 Jan 2019 4:45 AM IST (Updated: 10 Jan 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல் படுகிறது என்று திருவாரூரில், மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவாரூர்,

தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் திருவாரூரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் பேசிய தாவது:-

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மக்களிடம் செல்வோம்..மக்களிடம் சொல்வோம்.. மக்களின் மனதை வெல்வோம் என்ற முழக்கங்களை முன்வைத்து தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் கடந்த 3-ந் தேதி முதல் நடத்துவதாக அறிவித்து இருந்தோம். இதனை அறிந்த அ.தி.மு.க.வினர், வேண்டுமென்றே சட்டமன்ற கூட்டத்தொடர் 2-ந் தேதி தொடங்கும் என அறிவித்து இருந்தனர். இதன் மூலம் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு வராமல், ஊராட்சி சபை கூட்டத்திற்கு சென்று விடுவார்கள் என நினைத்தனர்.

ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் மிக முக்கியமானது. அதுவும் இப்போது தமிழகத்தில் மேகதாது, ஸ்டெர்லைட் ஆலை, விவசாயிகள், நெசவாளர்கள் என பல பிரச்சினைகள் தலைவிரித்தாடுகிறது. எனவே சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஊராட்சி சபை கூட்டத்தை தள்ளி வைத்தோம். இந்த நிலையில் நேற்று சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்ததால், உடனடியாக இன்று(அதாவது நேற்று) தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கிட முடிவு எடுத்தோம். அதன்படி தி.மு..க. தலைவர் மறைந்த கருணாநிதி ஈன்றெடுத்த திருவாரூர் மண்ணில் இந்த கூட்டத்தை தொடங்கி வைக்கின்றேன்.

ஊராட்சி சபை கூட்டம் மூலம் மக்களின் பிரச்சினைகளை கேட்கக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளேன். அதற்கு உரிய பரிகாரத்தை உருவாக்கி உங்கள் மனங்களை வெல்லக்கூடிய வகையில் கூட்டம் நடத்தப்படுகிறது. கிராமம் தான் முக்கியம். கிராமம் இல்லையென்றால் நகரம், பேரூர், மாநகரம் இல்லை. கிராமம் தான் உயிர் நாடி. இதுமட்டுமல்ல, அரசியல் அடிதளமே கிராமங்கள் தான். எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோரை தேர்ந்து எடுக்கக்கூடிய உரிமை உங்களிடம் தான் உள்ளது. அந்த காலத்தில் கிராம சபைகளில் குடவோலை முறையை பயன்படுத்தி உள்ளார்கள்.

அந்த முறையில் யாரை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பெயர்களை எழுதி பானையில் போட்டு குலுக்கி ஒரு சீட்டை எடுத்து தேர்வு செய்வார்கள். இதற்கான கல்வெட்டுகள் காஞ்சீபுரம் உத்திரமேரூர், கும்பகோணம், நெல்லிபாக்கம் ஆகிய இடங்களில் உள்ளன. இதில் அண்ணா பிறந்த காஞ்சீபுரம் மாவட்டம், கருணாநிதி பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குடவோலை முறை குறித்து கல்வெட்டு உள்ளது என்பது பெருமைக்குரியது. அத்தகைய பெருமைமிக்க மண்ணில் ஊராட்சி சபையில் கலந்து கொள்வதை நான் பெருமையாக கருதுகிறேன்.

ஒரு முறை அல்ல... இரு முறை, சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதி மக்கள், தி.மு.க. தலைவர் கருணாநிதியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளர்கள். அவர் இன்று இல்லை என்பது நமது குறை. அந்த குறையை யாராலும் நிவர்த்தி செய்ய முடியாது. அவர் என்னுடைய உருவத்தில் மட்டுமல்ல, உங்கள் உருவத்திலும் இருக்கிறார்.

அந்த இடத்திற்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை வரவேற்கிறோம். அதில் நிச்சயம் நாம் தான் வெற்றி பெறுவோம். ஆனால் திருவாரூர் தொகுதிக்கு முன்பே திருப்பரங்குன்றம் உள்பட 19 தொகுதிகள் காலியாக இருந்தது. ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும், தேர்தலை நடத்தக் கூடாது என்ற தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

ஆனால் மத்திய அரசின் கைப்பாவையாக உள்ள தேர்தல் ஆணையம், வேண்டுமென்றே திட்டமிட்டு, ஒரவஞ்சனையுடன் மற்ற தொகுதிகளை விட்டு விட்டு திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்தது. இந்த பிரச்சினை நீதிமன்றத்தில் தொடரப்பட்டு வழக்கில் இடைத்தேர்தலுக்கு தடை உத்தரவு பிறக்கப்படும் என்பதை அறிந்து அவசர, அவசரமாக காலை 6 மணிக்கே இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள 12,617 ஊராட்சிகளிலும், ஊராட்சி சபை கூட்டத்தை நடத்துவதற்கான காரணம் என்னவென்றால், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. அதனுடன் சட்டமன்ற தேர்தல் வரப்போகிறதா? என்கிற கேள்விக்குறியும் உள்ளது. இதனுடன் இடைத்தேர்தல், ஊராட்சி தேர்தல் வரப்போகிறது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் தமிழகத்திற்கு பல கொடுமைகள் வந்து கொண்டிருக்கிறது. மதவாத ஆட்சிக்கு துதி பாடுகின்ற அரசாக தமிழகத்தை ஆளுகின்ற எடப்பாடி பழனிசாமி அரசு இருந்து வருகிறது. விவசாயத்தை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கஜா புயலால் திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது.

இதுபோன்ற சூழ்நிலை தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏற்பட்டு இருந்தால் நமது தலைவர் கருணாநிதி, உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து தேவையான உதவிகள், நிவாரண பணிகளை மேற்கொண்டு இருப்பார். ஆனால் தற் போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களை சந்திக்காமல் ஹெலிகாப்டரில் பறந்து பாதிப்புகளை பார்வையிட்டார்.

எந்த காலத்திலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஹெலிகாப்டரில் சென்றதில்லை. டெல்லி செல்வதாக இருந்தாலும் விமானத்தில் தான் செல்வார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட உடன் முதலில் மக்களை சந்தித்தது தி.மு.க. தான். நான் நேரில் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களின் பாதிப்புகள், தேவைகள் அறிந்து எங்களால் முடிந்தவரை நிவாரண உதவிகளை வழங்கினேன்.

தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் எட்டு வழி சாலைக்காக விவசாய நிலங்களை அழிக்க முயல்கிறார். இதனை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

எனவே தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி என்பது மக்களின் நலனை அக்கறை கொள்ளாத கரப்ஷன் ஆட்சியாக, கமிஷன் ஆட்சியாக, கலெக்‌ஷன் ஆட்சியாக நடைபெற்று வருகிறது. மத்தியில், பாசிஷ ஆட்சி நடைபெற்று வருகிறது. கிராம சபைக்கு பஞ்சாயத்து ராஜ் என்று சொல்வோம். ஆனால் இப்போது இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை கரப்ஷன்ராஜ் என்றும், மத்திய ஆளும் பா.ஜனதா ஆட்சியை பாசிஷராஜ் என்றும் அழைக்கலாம்.

தேர்தல் நேரத்தில் தான் மக்களை சந்திக்க பலர் வருவார்கள். அதுவும் கிராமப்புறத்திற்கு வந்து ஓட்டுக்கேட்க மாட்டார்கள். ஆனால் தேர்தல் வருகிறோ, இல்லையோ மக்களின் பிரச்சினை அறிந்து கொள்ள தி.மு.க. சார்பில் ஊராட்சி கூட்டத்தை நடத்தி வருகிறோம்.

ஏற்கனவே நமக்கு நாமே மூலமாக தமிழகம் முழுவதும் சுற்றி வந்து அனைத்து தரப்பு மக்களின் குறைகளை கேட்டு அறிந்தோம். ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நிறைவேற்றுவோம் என உறுதியளித்தோம். ஆனால் ஆட்சிக்கு வர முடியாமல் போனது. குறைவான சதவீதத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தோம். இன்று பலமான எதிர்க்கட்சியாக இருக்கிறோம்.

இந்த நிலையில் மக்கள் நினைப்பது தி.மு.க. தான் ஆளும் கட்சியாக இருப்பதைப்போல் எண்ணுகின்றனர். ஏன் என்றால், எந்த பிரச்சனையாக இருந்தாலும் தி.மு.க. தான் குரல் கொடுத்து வருகிறது. விரைவில் வரக் கூடிய பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியை தேடித்தர வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் குறைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. நிவாரண பணிகள் நடைபெறவில்லை என்பது குற்றச்சாட்டு. ஒட்டு மொத்தமாக கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவி வருகிறது. ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குறைகளை பற்றி எடுத்து கூறினேன்.

ஆனால் முதல்-அமைச்சரும், சம்பந்தப்பட்ட அமைச்சரும் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. நிவாரணங்கள் முழுமையாக சென்று அடைந்ததாக அப்பட்டமான பொய்யை கூறி வருகின்றனர். உண்மைக்கு மாறான செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க. ஆட்சி வரப்போகிறது என்பதில் எங்களை விட அதிகமான நம்பிக்கையில் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த நிலை புலிவலத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது. எனவே அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து தி.மு.க. கடமையாற்றுவோம். உங்கள் கனவு தி.மு.க. ஆட்சியில் நிறைவேறும். சொன்னதை மட்டுமின்றி சொல்லாததையும் நிச்சயம் செய்வோம்.

திருவாரூர் தொகுதி வேட்பாளர் பூண்டி கலைவாணன் மட்டும் எம்.எல்.ஏ. அல்ல. கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆகிய நானும் திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.தான். எனவே திருவாரூர் தொகுதிக்கு விரைவில் 2 எம்.எல்.ஏ.க்கள் வரப்போகிறார்கள்.

இவ்வாறுஅவர் பேசினார். 

Next Story