“ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது” அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு


“ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது” அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Jan 2019 10:00 PM GMT (Updated: 9 Jan 2019 6:59 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டினார்.

கோவில்பட்டி, 


இதுகுறித்து அவர் கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் நேற்று மாலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களுடன் ரூ.100 வழங்கும் திட்டம், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டது. அவரது வழியில் ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் மகிழும் வகையில், பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், அனைவருக்கும் ரூ.1,000 வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, மேல்முறையீடு செய்யப்படும். இதில் சாதகமான தீர்ப்பினை பெற்று, அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். இது கடந்த 23 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்தது. கடந்த 16-10-1996 அன்று தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தொழில்துறை அமைச்சராக இருந்தபோதுதான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு சிப்காட் பகுதியில் 245 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கியும், விரிவாக்கமும் செய்த தி.மு.க.வினர் தற்போது இரட்டை வேடம் போடுகின்றனர்.

ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் அந்த ஆலை செயல்பட சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்கவில்லை. தொடர்ந்து கடந்த 28-5-2018 அன்று அரசாணை வெளியிடப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு, அதன் குடிநீர், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.


ஆனாலும் ஆலையின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை தடுக்க முடியாது. அவர்கள், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதித்து உத்தரவிடப்பட்டது. ஆனாலும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. எனினும் சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து, சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Next Story