கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
நெல்லை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் 2-வது நாளாக நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று முன்தினம் வேலை நிறுத்தம் தொடங்கியது. இதில் முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. நெல்லை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் நடந்தது.
அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. நெல்லை புதிய பஸ்நிலையம், பாளையங்கோட்டை பஸ்நிலையம், சந்திப்பு பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் வழக்கம் போல் இருந்தது. அதேபோல் ரெயில் சேவையிலும் பாதிப்பு இல்லை.
நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால், பெரும்பாலான வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஏராளமான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஊழியர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அதேபோல் இன்சூரன்ஸ், தபால் ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகங்கள், இன்சூரன்ஸ் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பல இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் அலுவலகம் செயல்படாது என்று நோட்டீசு ஒட்டப்பட்டு இருந்தது.
நெல்லை மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் ரெங்கனிடம் கேட்டபோது, நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். ஒரு நாளைக்கு ரூ.100 கோடிக்கு வங்கி பணபரிவர்த்தனை நடக்கிறது. இந்த 2 நாட்களில் ரூ.200 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது. மத்திய-மாநில அரசுகள் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story