பொங்கல் பரிசு பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? ரேஷன் கடைகளில் கலெக்டர் ஷில்பா ஆய்வு
பொங்கல் பரிசு பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என ரேஷன் கடைகளில் கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லையை அடுத்த சங்கர்நகரில் உள்ள சங்கர்நகர் இந்தியா சிமெண்டு தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலைக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று சென்றார். அவர் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக பொதுமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி உள்ளார். ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ.1000, 1 கிலோ பச்சரிசி, ஏலக்காய், கரும்பு, உலர் திராட்சை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து பொருட்களும் சரியான எடையில் கொடுக்கப்படுகிறதா? என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
பொங்கல் பொருட்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே, மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) மாறன், நெல்லை தாசில்தார் ஆவுடைநாயகம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story