கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு: வரிசையில் நின்ற 2 மூதாட்டிகள் மயக்கம்


கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு: வரிசையில் நின்ற 2 மூதாட்டிகள் மயக்கம்
x
தினத்தந்தி 9 Jan 2019 10:30 PM GMT (Updated: 9 Jan 2019 7:23 PM GMT)

கோவையில் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக வரிசையில் நின்ற 2 மூதாட்டிகள் மயக்கம் அடைந்தனர். அன்னூர் அருகே பணம் தீர்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை,

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ரேஷன்அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 1400 ரேஷன் கடைகள் மூலம் 10 லட்சத்து 3 ஆயிரத்து 477 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில் 8 லட்சத்து 45 ஆயிரம் பேரிடம் அரிசி அட்டைகள் உள்ளன. 75 ஆயிரம் பேரிடம் சர்க்கரை அட்டைகள், மற்றவை போலீஸ் அட்டைகள், முகவரி ஆவணத்துக்கான ரேஷன் அட்டைகள் ஆகும்.

இந்த ஆண்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்ததால் அனைத்து ரேஷன் கடைகளிலும் அதிகாலையிலேயே மக்கள் கூடினர். அவர்கள் நீண்டவரிசையில் காத்து நின்றனர். இதனால் முதல் நாளிலேயே அனைத்து ரேஷன் கடைகளிலும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர்.

அதிக ரேஷன் அட்டைகள் உள்ள கடைகளில் தினமும் 300 பேருக்கும், குறைந்த அட்டைகள் உள்ள ரேஷன் கடைகளில் தினமும் 100 பேருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக காலை 6 மணிக்கே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 10 மணி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது. முன்னதாகவே டோக்கன் வாங்காதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நேற்று பகல் 12 மணியளவில் ரூ.1000 வழங்குவதற்கு ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளதாக தகவல் பரவியது. இதனால் ரேஷன் கடைகளில் கூடி இருந்த மக்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது. ஆனாலும் மதியம் 2 மணி முதல் அனைத்து கடைகளிலும் ரூ.1000 மற்றும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டன.

இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 வழங்க தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது தெரியவந்தது. ஆனால் அது தொடர்பாக எழுத்துப்பூர்வமான உத்தரவு அரசிடம் இருந்து வர வில்லை. இதனால் கோவை மாவட்டத்தில் நேற்றுமாலை 5.30 மணிவரை அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்பட்டது. எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது என்ற தகவல் இன்று (வியாழக்கிழமை) தான் தெரியும். இன்றும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும். ஆனால் ரூ.1000 வழங்கப்படுமா? என்பது பற்றி அரசிடம் இருந்து தகவல் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியில் உள்ள ரேஷன் கடையில் 575 அட்டைதாரர்கள் உள்ளனர். நேற்று அந்த கடையில் 125 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு பொங்கல் பரிசு வழங்க ரூ.1000 இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திருப்பூர்-மேட்டுப்பாளையம் ரோடு கஞ்சப்பள்ளி பிரிவில் மதியம் 12.45 மணிக்கு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைவில் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சிங்காநல்லூரில் உள்ள நகர கூட்டுறவு ரேஷன் கடையில் நேற்று காலை முதலே பொங்கல் பரிசு வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து இருந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்புடன் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அப்போது வரிசையில் காத்து நின்ற 2 மூதாட்டிகள் வெயில் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story