2-வது நாளாக தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம், முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 600 பேர் கைது
கோவையில், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதையொட்டி நடந்த மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 600 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடந்தது. 2-ம் நாளான நேற்று அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், கூட்டமைப்பு தலைவரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆறுமுகம் தலைமையில் கோவை ரெயில் நிலையம் முன்பு கூடினார்கள். பின்னர் அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் திடீரென்று ஓடி வந்து ரெயில்நிலையம் முன்பு உள்ள சாலையில் உட்கார்ந்தும், படுத்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் நலன்களுக்கு எதிராக தொழிற்சங்க சட்டங்களை திருத்தக்கூடாது. குறைந்தபட்ச கூலி மாதம் ரூ.18 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும், சமவேலைக்கு சம சம்பளம் வழங்க வேண்டும், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.
இதில் ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தை சேர்ந்த மாவட்ட கவுன்சில் பொதுச்செயலாளர் தங்கவேல், கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்க செயலாளர் சிவசாமி, கட்டிடத்தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ், பொறியியல் தொழிலாளர் சங்க பொது செயலாளர் செல்வராஜ், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகம், மில் தொழிலாளர் சங்க தலைவர் ஜெகநாதன், மின்சார வாரிய தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் கந்தவேல், டெம்போ டாக்சி தொழிலாளர் சங்க செயலாளர் கணேசன், சி.ஐ.டி.யு. சங்கத்தை சேர்ந்த ராமமூர்த்தி, ஆட்டோ சங்க செயலாளர் சுகுமாரன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் மூர்த்தி மற்றும் ஐ.என்.டி.யு.சி. சங்கத்தை சேர்ந்த மாவட்ட தலைவர் கோவை செல்வம், எல்.பி.எப். சங்கத்தை சேர்ந்த ரத்தினவேல், எம்.எல்.எப். சங்கத்தை சேர்ந்த தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் உள்பட 600 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story