மாவட்ட செய்திகள்

கோவை அருகே ரூ.98 லட்சம் நகையை கொள்ளையடித்த கும்பல் அடையாளம் தெரிந்தது + "||" + Near Coimbatore It was a sign of gang robbery of Rs .98 lakh jewelery

கோவை அருகே ரூ.98 லட்சம் நகையை கொள்ளையடித்த கும்பல் அடையாளம் தெரிந்தது

கோவை அருகே ரூ.98 லட்சம் நகையை கொள்ளையடித்த கும்பல் அடையாளம் தெரிந்தது
ரூ.98 லட்சம் நகையை காருடன் கொள்ளையடித்த வழக்கில் கொள்ளை கும்பல் அடையாளம் தெரிந்தது. கொள்ளையர்கள் தப்பிச்செல்ல பயன்படுத்திய கார் மீட்கப்பட்டது. 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ‘கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் இருந்து கோவையில் உள்ள அந்த நிறுவனத்தின் மற்றொரு கடைக்கு ரூ.98 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை அர்ஜூன் (வயது 22), வில்பர்ட்(31) ஆகியோர் காரில் கொண்டு வந்தனர்.

கோவை நவக்கரை அருகே கார் வந்த போது பின்னால் 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் நகைக்கடை ஊழியர்களின் கார் மீது மோதியது. பின்னர் அந்த கும்பல் நகைக்கடை ஊழியர்களை மிரட்டி காரில் இருந்து கீழே இறக்கி விட்டு விட்டு காருடன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நகைக்கடை ஊழியர்களின் கார் நேற்று முன்தினம் மதுக்கரை தென்றல்நகர் பகுதியில் சாலையோரம் அனாதையாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதை அறிந்த போலீசார் அந்த காரை மீட்டனர். நகையை கொண்டு வந்த அர்ஜூன், வில்பர்ட் ஆகியோரை சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அங்கிருந்த சோதனைச்சாவடி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில், கொள்ளையர்கள் வந்த 2 கார்களில் ஒரு காரின் எண் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. இதனால் அந்த காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்த போது, அந்த கார் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது

உடனே அந்த முகவரியை தேடி கண்டுபிடித்து காரின் உரிமையாளரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அப்போது அவர், அந்த காரை கோவையை சேர்ந்த ஒருவருக்கு விற்று விட்டதாகவும், காரை வாங்கிய வர் இதுவரை பெயரை மாற்றாமல் இருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து அவர் காரை விற்றதாக கூறிய நபரின் செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். ஆனால் அந்த செல்போன் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து கோவையில் இருந்து கேரளா செல்லும் பாதைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் மீண்டும் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து கேரளாவுக்கு சென்றதும், நகைக்கடை கார் கோவை வந்த போது அந்த காரை பின்தொடர்ந்து வந்ததும் தெரிய வந்தது.

எனவே இந்த சம்பவத்தில் சென்னை மற்றும் கோவையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பற்றிய தகவல்கள் போலீசாருக்கு தெரிய வந்தது. எனவே கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் கொள்ளையர்கள் தப்பிய 2 கார்களில் ஒன்று மட்டும் கோவை மதுக்கரை அருகே உள்ள வழுக்குப்பாறை பகுதியில் அனாதையாக நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று காரை மீட்டனர். இதனால் கொள்ளையர்கள் ஒரு காரை நிறுத்தி விட்டு மற்றொரு காரில் 10 பேரும் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.இதற்கிடையே காரில் கொண்டு வந்த நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் 5 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கூறும்போது, ‘இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய துப்பு கிடைத்துள்ளது. சென்னையை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து இந்த கொள்ளை அரங்கேற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வருகிறோம். ஒரு சில நாட்களில் கொள்ளையர்கள் கைது ஆவார்கள்’ என்றார்.