கும்பகோணத்தில் வாய்க்காலில், சைக்கிளுடன் பிணமாக கிடந்த ஓட்டல் ஊழியர் கொலையா? போலீசார் விசாரணை


கும்பகோணத்தில் வாய்க்காலில், சைக்கிளுடன் பிணமாக கிடந்த ஓட்டல் ஊழியர் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Jan 2019 4:00 AM IST (Updated: 10 Jan 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் வாய்க்காலில் ஓட்டல் ஊழியர் ஒருவர் சைக்கிளுடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கவரத்தெருவை சேர்ந்த ஜெயபால் மகன் பாலகிருஷ்ணன் (வயது32). இவர் கும்பகோணம் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சைக்கிளில் சென்ற பாலகிருஷ்ணன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணனின் மனைவி தீபாலட்சுமி (27) மற்றும் உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை கும்பகோணம் நால்ரோடு அருகே உள்ள வாய்க்காலில் ஒருவர் சைக்கிளுடன் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று வாய்க்காலில் கிடந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தது பாலகிருஷ்ணன் என்பதும், அருகில் கிடந்தது அவருடைய சைக்கிள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பாலகிருஷ்ணனின் உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாலகிருஷ்ணன் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story