திருச்சி மாநகர போலீசாருக்கு ‘பட்டன்கேமரா’ பொருத்த திட்டம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேட்டி


திருச்சி மாநகர போலீசாருக்கு ‘பட்டன்கேமரா’ பொருத்த திட்டம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேட்டி
x
தினத்தந்தி 9 Jan 2019 11:00 PM GMT (Updated: 9 Jan 2019 7:52 PM GMT)

திருச்சி மாநகர பஸ் நிறுத்த நிழற்குடைகளில் குளிர்சாதன வசதி ஏற்படுத்துவதுடன், பணியின்போது போலீசாருக்கு ‘பட்டன்கேமரா’ பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி மாநகரில் குற்றங்களை தடுக்கும் வகையில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றின் சி.சி.டி.வி.கேமராக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ள 2,500 சி.சி.டி.வி. கேமராக்களை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்தவாறு கண்காணிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

அத்துடன் மாநகர போலீஸ் சார்பில் முக்கிய பகுதிகளான ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருச்சி விமான நிலையம், ரேஸ்கோர்ஸ் மைதானம் உள்ளிட்ட இடங்களில் 700 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வருகிற மார்ச் மாத இறுதிக்குள் 300 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதன் விளைவாக மாநகரில் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. 5 வழிப்பறி நடந்தது என்றால், அவற்றில் 3 கண்காணிப்பு கேமராக்களில் சிக்கி குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி சம்பவத்தை ஒரே நபர் பல்வேறு இடங்களில் நிகழ்த்தி இருந்தார். அவை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவானதன் மூலம், குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பணியின்போது போலீசார் மாமூல் வாங்குவதை கண்காணித்து கடந்த 6 மாதங்களில் 2 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் பணியின்போது போலீசாரின் சீருடையில் ‘பட்டன் கேமரா’ பொருத்தும் திட்டம் யோசனையில் உள்ளது. இதுபோன்ற திட்டம் கேரள மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது.

திருச்சி மாநகரில் கோடைகாலம் வருவதையொட்டி, பயணிகள் பஸ் நிறுத்த நிழற் குடைகளை குளிர்சாதன வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை அருகில் உள்ள நிழற்குடை குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருந்தது. தற்போது அது செயல்பாட்டில் இல்லை. அதை மீண்டும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல மாநகரில் முக்கிய கல்லூரி, நிறுவனங்கள் உள்ள பகுதியில் உள்ள நிழற்குடைகளை சில நிறுவனங்களை தத்தெடுத்து குளிர்சாதன வசதி ஏற்படுத்திட முன்வந்துள்ளன. மாநகர போலீசார் ஒத்துழைப்புடன் இது செயல்படுத்தப்படும். இதற்காக மாநகராட்சி நிர்வாகத்திடமும் பேசப்பட்டுள்ளது. திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்து பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. பிப்ரவரி மாதம் இறுதியில் அது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story