பிறப்பு சான்றிதழ் வழங்க தாமதம்: கைக்குழந்தைகளுடன் அரசு ஆஸ்பத்திரியை பெற்றோர் முற்றுகை நாமக்கல்லில் பரபரப்பு


பிறப்பு சான்றிதழ் வழங்க தாமதம்: கைக்குழந்தைகளுடன் அரசு ஆஸ்பத்திரியை பெற்றோர் முற்றுகை நாமக்கல்லில் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Jan 2019 4:00 AM IST (Updated: 10 Jan 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க காலதாமதம் செய்வதாக கூறி பெற்றோர், கைக்குழந்தைகளுடன் நாமக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தை பிரிவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.

நாமக்கல், 

அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அந்த மருத்துவமனையிலேயே பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் பிறந்த குழந்தைகளுக்கு கடந்த 6 மாதங்களாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் நேற்று சுமார் 15 தாய்மார்கள் கைக்குழந்தைகளுடன் பச்சிளம் குழந்தைகள் பிரிவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் கூறியதாவது:-

குழந்தை பிறந்த 2 நாட்களில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தெரிவித்து உள்ளது. சில அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த நடைமுறை உள்ளது. ஆனால் இந்த மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தைகளுக்கும் இன்னும் பிறப்பு சான்றிதழ் வழங்க மறுத்து, காலதாமதம் செய்து வருகின்றனர்.

குழந்தை பிறந்த நேரத்தில் பிரசவ வார்டில் டாக்டர்கள் இல்லை. மருத்துவமனை ஊழியர்கள் பிரசவித்த தாய்மார்களை கீழ்தரமாக நடத்துகின்றனர். பணி செய்வதற்காக ஊழியர்கள் ரூ.500 வரை லஞ்சம் கேட்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அங்குள்ள ஊழியர்கள் சமாதானப்படுத்தியும் அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் உஷா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பிறப்பு சான்றிதழ் கிடைக்கவும், பிற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story