சுமைதூக்கும் தொழிலாளி கொலை, 6 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
திண்டுக்கல்லில் சுமைதூக்கும் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த 6 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்தவர் அருள்சாமி (வயது 48). சுமைதூக்கும் தொழிலாளி. கடந்த 3-ந்தேதி காலை அருள்சாமி, தனது மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து ஓட,ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது.
இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் திண்டுக்கல் என்.எஸ்.நகரை சேர்ந்த கோபி (21), வடமதுரையை சேர்ந்த ஆனந்தராஜ் (26), பிரதீப் (23), புவனேஷ்குமார் (21), அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த இக்னேசியஸ் இன்பராஜ் (35), பொன்மாந்துறை புதுப்பட்டி ஆனந்த் (27) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
அதேநேரம் போலீசாரால் தேடப்பட்ட பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த ரங்கமூர்த்தி (30), சிறுமலையை சேர்ந்த சக்திவேல் (23), பாரதிபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (24), சுதாகரன் (25), உதயன் (25), அன்பழகன் (30) ஆகிய 6 பேர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று 6 பேரையும் பலத்த பாதுகாப்புடன், திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது 6 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட்டு கண்ணன் அனுமதி அளித்தார். அதன்பேரில் 6 பேரையும் காவலில் எடுத்து திண்டுக்கல் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த ஸ்ரீரங்கன் (23) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் நேற்று பழனி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story