தர்மபுரி மாவட்டத்தில் 3 நீர்ப்பாசன திட்டங்கள் அறிவிப்பு முதல்-அமைச்சருக்கு விவசாய சங்கத்தினர் பாராட்டு


தர்மபுரி மாவட்டத்தில் 3 நீர்ப்பாசன திட்டங்கள் அறிவிப்பு முதல்-அமைச்சருக்கு விவசாய சங்கத்தினர் பாராட்டு
x
தினத்தந்தி 9 Jan 2019 10:00 PM GMT (Updated: 9 Jan 2019 8:06 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 3 நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்ட முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

தர்மபுரி,

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொல்புதூர் வலதுபுற கால்வாயில் இருந்து தர்மபுரி மாவட்டம் தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாய் திட்டம், அளியாளம் அணைக்கட்டில் இருந்து தூள்செட்டி ஏரி வரை கால்வாய் அமைக்கும் திட்டம், ஜெர்தலாவ் கால்வாயின் 5 ஆயிரம் மீட்டரில் இருந்து புலிக்கரை ஏரிவரை கால்வாய் அமைக்கும் திட்டம் ஆகிய 3 நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட 3 திட்டங்களையும் அறிவித்து அதற்கான நிலம் கையகப்படுத்துவதற்கான ஆயத்த பணியை மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டங்களை அறிவித்த முதல்-அமைச்சருக்கு தர்மபுரி மாவட்ட விவசாய சங்கத்தினர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி கூறியதாவது:-

எண்ணேகொல்புதூர் வலதுபுற கால்வாயில் இருந்து தும்பலஅள்ளி அணைக்கு கால்வாய் அமைக்கும் திட்டம், அனியாளம் அணைக்கட்டில் இருந்து தூள்செட்டி ஏரிவரை கால்வாய் அமைக்கும் திட்டம், ஜெர்தலாவ் கால்வாய் நீட்டிப்பு திட்டம் ஆகியவை நிறைவேற்றப்படும் என்று அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோருக்கு தர்மபுரி மாவட்ட விவசாயிகள் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றப்படுவதன் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பயன்பெறும். இந்த கால்வாய்களில் வரும் தண்ணீரை சேமித்து வைப்பதன் மூலம் மழைப்பொழிவு இல்லாத காலங்களிலும் விவசாய பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இந்த திட்டப்பணிகளை விரைவாக செயல்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story