ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூரில் கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூரில் கஞ்சா கடத்தல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
ஸ்ரீபெரும்புதூரில் போதை பொருள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ்சீசர், இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் சோதனை செய்தனர். அப்போது ஒருவர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தார். அவர் அருகே ஒரு மூட்டை இருந்தது.
அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் வைத்திருந்த மூட்டையை சோதனை செய்தனர். அதில் 16 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை அடுத்த குடிமண்டலம், சேக்லாம்பட்டியை சேர்ந்த பகந்துலாபாப்பாராவ் (வயது 35) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கேரளாவுக்கு கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கந்துலாபாப்பாராவை கைது செய்து அவரிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். பகந்துலாபாப்பாராவை ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்றுமுன்தினம் மாலை திருவள்ளூர்–திருப்பதி நெடுஞ்சாலையான பாண்டூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்து கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். இருப்பினும் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பையில் 16 கிலோ கஞ்சா இருந்ததை கண்ட போலீசார் அதை பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில் கஞ்சா கடத்தி வந்த நபர் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த யுவராஜ் (வயது 24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவருடன் வந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர் யார்? என விசாரித்து வருகின்றனர்.