ஆட்டோவுக்கு கியாஸ் நிரப்புவதில் தகராறு: ஐ.டி.ஐ. மாணவருக்கு அரிவாள் வெட்டு
ஆட்டோவுக்கு கியாஸ் நிரப்புவதில் ஏற்பட்ட தகராறில் அங்கு பகுதி நேரமாக பணியாற்றி வந்த ஐ.டி.ஐ. மாணவரை அரிவாளால் வெட்டிவிட்டு ஆட்டோவில் தப்பிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடி,
ஆவடியை அடுத்த பட்டாபிராம் கோபாலபுரம் சித்தேரிக்கரையை சேர்ந்த சங்கர் என்பவருடைய மகன் புருஷோத்தமன் (வயது 18). இவர், அம்பத்தூரில் உள்ள ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், பகுதி நேரமாக பட்டாபிராம் பகுதியில் உள்ள ஆட்டோக்களுக்கு கியாஸ் நிரப்பும் ஒரு பங்க்கில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு ஆட்டோக்களில் வந்த சிலர் ஆட்டோவில் கியாஸ் நிரப்பும்படி கூறினர். அப்போது புருஷோத்தமன் கியாஸ் நிரப்புவதற்குள் 4 பேர், தங்களுக்கு சீக்கிரமாக ஆட்டோவில் கியாஸ் நிரப்ப சொல்லி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அவர், வரிசைப்படி ஆட்டோவுக்கு கியாஸ் நிரப்புவதாக தெரிவித்தார்.
இதனால் 4 பேரில் ஒருவர் ஆத்திரம் அடைந்து, திடீரென தனது கையில் வைத்திருந்த அரிவாளால் புருஷோத்தமனை தலையில் சரமாரியாக வெட்டினார். இதில் நிலைகுலைந்த புருஷோத்தமன் மயங்கி விழுந்தார். பின்னர் 4 பேரும் ஆட்டோவில் தப்பிச்சென்று விட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த புருஷோத்தமன், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 13 தையல்கள் போடப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கியாஸ் நிரப்பும் பங்க்கில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.