6 இடங்களில் சாலை மறியல், தொழிற்சங்கத்தினர் 598 பேர் கைது


6 இடங்களில் சாலை மறியல், தொழிற்சங்கத்தினர் 598 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2019 4:30 AM IST (Updated: 10 Jan 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

வேலை நிறுத்தத்தையொட்டி, 6 இடங்களில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 598 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி,

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் நாடு தழுவிய அளவில் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் 2-வது நாளாக நடந்த வேலை நிறுத்தத்தால் பெரும்பாலான வங்கிகள், தபால் நிலையங்கள் பூட்டிக் கிடந்தன. ஊரக வளர்ச்சித்துறை உள்பட சில அரசுத்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால், வங்கி பணிகள், அரசு அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

அரசு போக்குவரத்து கழகத்தில் 99 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டன. கேரள மாநிலத்துக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்படவில்லை. மற்ற இடங்களுக்கு வழக்கம்போல் பஸ்கள் இயங்கின. ஆட்டோக்களும் வழக்கம் போல் இயங்கின.

இந்தநிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தேனி, போடி, ஆண்டிப்பட்டி, மயிலாடும்பாறை, கம்பம், பெரியகுளம் ஆகிய 6 இடங்களில் சாலை மறியல் செய்தனர். தேனியில் நேரு சிலை சிக்னல் அருகில் சாலை மறியல் நடந்தது. இதற்காக பள்ளிவாசல் தெரு சந்திப்பில் இருந்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவரும், பெரியகுளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லாசர் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத் மற்றும் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மறியலில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் செய்த 72 பெண்கள் உள்பட 272 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், போடி தேவர் சிலை அருகில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ரவிமுருகன் தலைமையில் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 37 பேர் கைது செய்யப்பட்டனர். ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலை அருகில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் மறியல் நடந்தது. மறியல் செய்த 69 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடும்பாறையில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் சண்முகம் தலைமையில் மறியல் நடந்தது. இதில் 63 பேர் கைது செய்யப்பட்டனர். கம்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை செயலாளர் சுந்தரராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 76 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பெரியகுளம் மூன்றாந்தல் பிரிவில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் மறியல் செய்த 81 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடந்த சாலை மறியலில் மொத்தம் 598 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story