கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விதானசவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் விவசாயிகள் சங்க தலைவர் எச்சரிக்கை
பிப்ரவரி 13-ந் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விதான சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்க தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநில விவசாயிகள் சங்க தலைவர் நாராயணகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வருகிற பிப்ரவரி மாதம் 13-ந் தேதி விவசாயிகளின் தலைவராக கருதப்படும் நஞ்சுண்டசாமியின் பிறந்த நாள் ஆகும். அதற்குள் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும். கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்குமாறு நாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
தக்க பாடம் புகட்டுவோம்
ஆனால் மத்திய-மாநில அரசுகள் அதை கண்டுகொள்ளவில்லை. கர்நாடக அரசு அலட்சியமாக இருந்தால், வருகிற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம். பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சரிசெய்ய வேண்டும்.
நீர்ப்பாசன திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் நலனை காக்க வேண்டும்.
உள்நாட்டு விதைகளை...
வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு போதுமான நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டும். உள்நாட்டு விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும், வெளிநாட்டு விதைகள் உற்பத்தியை நிராகரிக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை விரைவாக பட்டுவாடா செய்ய வேண்டும். வருகிற பிப்ரவரி மாதம் 13-ந் தேதிக்குள் இந்த கோரிக்கைகளை நிைறவேற்றாவிட்டால், பெங்களூருவில் விதானசவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு நாராயணகவுடா கூறினார்.
Related Tags :
Next Story