ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 5 ஆண்டு சிறை


ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 5 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 10 Jan 2019 3:46 AM IST (Updated: 10 Jan 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

விவசாயியிடம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா ஈச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 52), விவசாயி. இவர் கடந்த 2009-ம் ஆண்டில் அதே கிராமத்தில் ஏழுமலை என்பவரிடம் இருந்து 1 ஏக்கர் நிலத்தை கிரயம் பெற்று வாங்கினார்.

இந்த நிலத்திற்கான முத்திரைக்கட்டணம் ரூ.67,360-ஐ பாதியாக குறைத்து செலுத்த ஏற்பாடு செய்வதாக திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் உள்ள முத்திரைத்தாள் பிரிவில் உதவியாளராக பணியாற்றி வந்த காந்தரூபன் என்பவர் தாமோதரனிடம் ரூ.9 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத தாமோதரன் இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கூறிய அறிவுரைப்படி கடந்த 8.4.2009 அன்று ரசாயன மை தடவிய பணத்தை தாமோதரன் எடுத்துக்கொண்டு திண்டிவனம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த காந்தரூபனிடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கும்போது காந்தரூபனை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு நடைபெற்று கொண்டிருந்த வேளையில் காந்தரூபன், பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா, குற்றம் சாட்டப்பட்ட காந்தரூபனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

Next Story