விருதுநகரில் வி‌ஷம் குடித்து பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவர்


விருதுநகரில் வி‌ஷம் குடித்து பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவர்
x
தினத்தந்தி 10 Jan 2019 4:00 AM IST (Updated: 10 Jan 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

வி‌ஷம் குடித்துவிட்டு வந்த பிளஸ்–2 மாணவர் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகர்,

விருதுநகரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ்–2 படித்து வரும் மாணவர் ஒருவர் வழக்கம்போல் பள்ளிக்கு வந்திருந்தார். பள்ளிக்கூட வளாகத்தில் திடீரென்று அவர் சுருண்டு விழுந்து மயங்கி கிடந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரியர்களும், மாணவர்களும் பதறியபடி என்னவோ, ஏதோவென்று ஓடிவந்து பார்த்தனர். பின்னர் அந்த மாணவரை உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது, அந்த மாணவர் எலி மருந்தை (வி‌ஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விருதுநகர் கிழக்கு போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த மாணவரிடம் விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே அந்த மாணவரின் பெற்றோரும், உறவினர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

அந்த மாணவர் தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாவது:–

அந்த மாணவருக்கும், சக மாணவர்கள் சிலருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவரை பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்ற நிர்வாகம் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்வித்துறை உயர் அதிகாரியிடம் அந்த மாணவரும், அவருடைய பெற்றோரும் முறையிட்டுள்ளனர். அதன் பின்பு அந்த மாணவருக்கு சிறப்பு வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

சில மாணவர்களுடன் சேர்ந்து அந்த மாணவரும் சிறப்பு வகுப்புக்கு அழைக்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் இதை அந்த மாணவர் விரும்பவில்லை என்றும் தெரியவருகிறது. இதனால் வி‌ஷமருந்தி விட்டு அவர் பள்ளிக்கு வந்து மயங்கி விழுந்துள்ளார்.

அந்த மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.


Next Story