பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை
பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்தார்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வடுகர் என்ற கம்மவார் மகாஜன சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா நேற்று சிவகாசியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க கோர்ட்டு தடை விதித்து இருக்கிறது. இது குறித்து கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அனைவருக்கும் வழங்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். பண்டிகை காலங்களில் எந்த புதுப்படம் ரிலீஸ் ஆனாலும் சம்பந்தப்பட்டவர்கள் சிறப்பு காட்சி நடத்த அனுமதி கோரினால் உரிய அனுமதி வழங்கப்படும். யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை.
பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டர்களில் டிக்கெட்டில் அச்சிடப்பட்ட தொகையைத்தான் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற தவறை முதல் முறையாக ஒரு திரையரங்கம் செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அதே தவறை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையாக அதே தவறை அந்த திரையரங்கம் செய்தால் அந்த தியேட்டரின் உரிமம் ரத்து செய்யப்படும்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என கண்காணிக்கப்படும். வருகிற பொங்கல் அன்று தியேட்டர்களின் திடீர் சோதனை செய்யப்படும். ஆய்வில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் அந்த தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்–அமைச்சர் எடுப்பார்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். முன்னதாக அவர் விருதுநகரில் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்த போது சட்டசபையில் 69 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக பேசும் போது பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவரது கோட்பாட்டின் படியே ஆட்சி நடத்தும் தமிழக அரசும் பொதுப்பிரிவினருக்காக 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரை 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியதோடு வெளிநடப்பும் செய்தார். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளார். அ.தி.மு.க.வுக்கு தேர்தல் பயம் இல்லை. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவது பற்றி, முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் முடிவு எடுப்பார்கள்.
சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தியது தொடர்பாக சட்டசபையில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வும், டாக்டர் பரமசிவம் எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தில் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட உள்ள சிகிச்சை மற்றும் நிவாரண உதவி குறித்தும் சுகாதாரத்துறை அமைச்சர் தனது பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
ராமசாமி படையாச்சி, சிவாஜி கணேசன் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. பத்திரிகை துறைக்கும், தமிழுக்கும், விளையாட்டு துறைக்கும், ஆன்மிகத்துக்கும் பெருந்தொண்டு ஆற்றிய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என தூத்துக்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததன் பேரில் தற்போது அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மக்களுக்கு தொண்டாற்றியவர்களை மதிப்பதில் தமிழக அரசு என்றும் பின்வாங்கியது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.