பட்டாசு ஆலைகளை திறக்கக் கோரி மறியல்


பட்டாசு ஆலைகளை திறக்கக் கோரி மறியல்
x
தினத்தந்தி 9 Jan 2019 11:00 PM GMT (Updated: 9 Jan 2019 10:34 PM GMT)

பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் சுற்றுச்சசூழல் பாதுகாப்பு விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளித்து சட்டம் இயற்றவேண்டும், சரவெடிக்கு விதித்துள்ள தடையை விலக்க வேண்டும். பச்சை உப்பு என்கிற பேரியம் நைட்ரேட் மூலப்பொருளை தடை செய்யக் கூடாது, பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும், ஆலைகளை திறக்கும் வரை தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் நடைபெறும் என்று பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சிவகாசி பஸ் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்துக்கு லாசர் தலைமை தாங்கினார். ஜோதிமணி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. அமைப்பின் மாநில துணைப்பொதுச்செயலாளர் கருமலையான், மாவட்ட செயலாளர் தேவா, சுரேஷ்குமார், பழனி உள்பட 76 பேர் கலந்து கொண்டனர். மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதே போல் ஏழாயிரம் பண்ணை, வெம்பக்கோட்டை, கன்னிச்சேரி புதூர், திருத்தங்கல், மாரனேரி, சாத்தூர், டின்.சி.முக்குரோடு உள்ளிட்ட இடங்களில் மறியல் நடந்தது. மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 180 பெண்கள் உள்பட 337 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story