பெண்ணாடம் அருகே இருதரப்பினர் மோதலில் காயமடைந்த பெண் சாவு


பெண்ணாடம் அருகே இருதரப்பினர் மோதலில் காயமடைந்த பெண் சாவு
x
தினத்தந்தி 10 Jan 2019 4:30 AM IST (Updated: 10 Jan 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே இருதரப்பினர் மோதலில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை உறவினர்கள் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்ணாடம், 

பெண்ணாடம் அருகே உள்ள பெரியகொசப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி ராமு (வயது 59). அதே பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் இளம்பரிதி(36). இவர் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லட்சுமணனின் வீட்டை இளம்பரிதி ஒப்பந்த அடிப்படையில் கட்டி கொடுத்தார்.

கட்டுமான பணி முடிவடைந்த பிறகு, பணம் கொடுப்பது தொடர்பாக லட்சுமணனுக்கும், இளம்பரிதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஒருவரையொருவர் திட்டி தாக்கிக்கொண்டனர். இதில் லட்சுமணன், ராமு, அவரது மகன் சக்திவேல் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ராமு மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதுகுறித்து லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமு, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் நேற்று காலை பெரியகொசப்பள்ளத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது அவரது உறவினர்கள் ராமுவின் சாவுக்கு இளம்பரிதி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம். அதனால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி ராமுவின் உடலை பெரியகொசப்பள்ளம் பேருந்து நிறுத்தம் அருகே திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், ராமுவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினர். அதற்கு போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட ராமுவின் உறவினர்கள் மறியலை கைவிட்டு, அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச்சென்றனர். இந்த மறியலால் திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story