வேலை நிறுத்தம் காரணமாக மும்பையில் பஸ் போக்குவரத்து ஸ்தம்பித்தது; பயணிகள் பரிதவிப்பு
மும்பையில் பெஸ்ட் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 2-வது நாளாக பஸ் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பயணிகள் பரிதவித்தனர்.
மும்பை,
பெஸ்ட் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. ஆனால் சிவசேனாவின் தொழிற்சங்க பிரிவான காம்கார் சேனாவை சேர்ந்த ஊழியர்கள் பணிக்கு திரும்பியதை அடுத்து, 500 பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று வெறும் 5 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மற்ற அனைத்து பஸ்களும் டெப்போவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இயக்கப்பட்ட 5 பஸ்களிலும் இரும்பு வலைகள் கட்டப்பட்டு இருந்தன. போலீஸ் பாதுகாப்புடன் அந்த பஸ்கள் இயக்கப்பட்டன.
இருப்பினும் வடலாவில் ஒரு பஸ் மீது மர்மஆசாமிகள் கல்வீசி தாக்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. அந்த பஸ் உடனடியாக டெப்போவுக்கு திரும்பியது.
கட்டண கொள்ளை
தொடரும் பெஸ்ட் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 2-வது நாளாக நேற்றும் பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கியது. வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட அனைவரும் ரெயில் நிலையங்கள், ஆட்டோ, டாக்சி ஸ்டாண்டுகளை நோக்கி படையெடுத்தனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நேற்றும் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டனர். அலுவலகத்துக்கு செல்ல வேண்டுமே, வீடு திரும்ப வேண்டுமே என்ற ஆதங்கத்துடன் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து விட்டும் பயணம் செய்ததாக மும்பைவாசிகள் பலரும் வேதனையுடன் தெரிவித்தனர்.
மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்கள் சார்பில் கூடுதல் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டன. இருப்பினும் நேற்று புறநகர் மின்சார ரெயில்களில் கால் வைக்க கூட முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்தது. மதிய நேரத்திலும் அதிகளவில் மின்சார ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பயணிகள் அதிருப்தி
பெஸ்ட் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பஸ் பயணிகள் மிகுந்த அதிருப்தி அடைந்து உள்ளனர். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்களது வேதனைகளை கொட்டி தீர்த்த வண்ணம் இருந்தனர்.
வடலாவுக்கு பெஸ்ட் பஸ்சில் பணிக்கு செல்லும் காட்கோபரை சேர்ந்த பிரமோத் என்பவர் கூறுகையில், ‘‘சில பேர் சேர்ந்து எப்படி நகரை முடக்க முடிகிறது? அரசாங்கம் என்ன செய்து கொண்டு இருக்கிறது? அப்பாவி மக்களை மறந்து விட்டு அடுத்த தேர்தலுக்கு தயாராகி வருவது போல தெரிகிறது’’ என்றார்.
குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ்
இதற்கிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பெஸ்ட் பஸ் ஊழியர்கள் பெஸ்ட் குழும குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்று நிர்வாகம் எச்சரித்தது. அது மட்டும் அல்லாமல் போய்வாடாவில் உள்ள குடியிருப்புக்கு சென்ற அதிகாரிகள், குடியிருப்புகளில் இது தொடர்பான நோட்டீஸ் ஒட்டினர். குடியிருப்பில் இருந்தவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குடியிருப்புகளை காலி செய்யுமாறு 2 ஆயிரம் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
Related Tags :
Next Story