தனித்தனி சம்பவத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் தீக்குளித்து தற்கொலை


தனித்தனி சம்பவத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 10 Jan 2019 4:34 AM IST (Updated: 10 Jan 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

தனித்தனி சம்பவத்தில் பெண் உள்பட 2 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி, 

சங்கராபுரம் அருகே உள்ள சூ.பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 23). இவருடைய மனைவி பவித்ரா(19). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பவித்ரா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவர், வலியால் அலறித்துடித்தார். இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பவித்ராவை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சடையன். இவருடைய மகன் பிரபு(வயது 23). இவருக்கும் கச்சிராயப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று பிரபு குரூர் ஏரிக்கரையில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரபு உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு உடல்நலக்கோளாறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story